சென்னை வந்தார் திரவுபதி முர்மு... சால்வை அணிவித்து பூங்கொத்து கொடுத்து வரவேற்ற ஈபிஎஸ்.. கூட்டணி கட்சிகளிடம் ஆதரவு கோரினார்

சென்னை : : குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் விரைவில் நிறைவடைகிறது. இதையடுத்து புதிய குடியரசு தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் வரும் 18ம் தேதி நடக்கிறது. இதில் எம்பிக்கள், எம்எல்ஏக்கள் வாக்களிக்கின்றனர். 21ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. இத்தேர்தலில் தேஜ கூட்டணி சார்பில் பாஜக வேட்பாளராக திரவுபதி முர்மு, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா ஆகியோர் போட்டியிடுகின்றனர். பாஜ வேட்பாளர் திரெளபதி முர்மு ஒவ்வொரு மாநிலமாக சென்று தனக்கு ஆதரவு திரட்டி வருகிறார்.

அதன்படி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் திரவுபதி முர்மு சென்னை வந்தார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தாஜ் கோரமண்டல் ஓட்டலில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில்,மத்திய இணை மந்திரி எல்.முருகன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அ.தி.மு.க. சார்பில் எடப்பாடி பழனிசாமி, பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் ஜான்பாண்டியன், இந்திய மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் தேவநாதன் யாதவ் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். மேலும் அதிமுக, பாஜக, பாமக எம்எல்ஏக்களும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அங்கிருந்த மேடைக்கு வந்த திரவுபதி முர்முவை எடப்பாடி பழனிசாமி சால்வை அணிவித்து பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். பின்னர் தமிழக பாஜக கூட்டணி கட்சிகள் தமக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று திரவுபதி முர்மு கேட்டுக் கொண்டார்.

Related Stories: