ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் பிளாஸ்டிக்களுக்கு தடை விதிக்க தீர்மானம் நிறைவேற்றம்

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை பேரூராட்சி மன்ற கூட்டம் பேரூராட்சி  தலைவர் அப்துல் ரஷீத் தலைமையில் நடைபெற்றது. துணைத் லைவர் குமரவேல்,  செயல் அலுவலர் மாலா முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் ஊத்துக்கோட்டை பேரூராட்சி முழுவதும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு முற்றிலும்  தடை விதிக்க  வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திமுக கவுன்சிலர் ஜீவா: ஊத்துக்கோட்டை பேரூராட்சியில்  அனைத்து ஆழ்துளை கிணறுகளையும்  சுத்திகரிப்பு செய்து மக்கள் பயன்பாட்டிற்கு வழங்கவேண்டும்.  திருவள்ளூர் சாலையில்  7 வார்டுகளை சேர்ந்த மக்கள் பயன்படுத்தக்கூடிய சுடுகாட்டுக்கு பாதை அமைத்து தரவேண்டும். நாகலாபுரம் சாலையில் உள்ள வணிகவரித்துறை சோதனை சாவடியால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் அதை வேறு இடத்துக்கு மாற்றவேண்டும். தூய்மை பணியாளர்களுக்கு சம்பளம் தர ஏற்பாடு செய்ய வேண்டும்.  

கோகுல்கிருஷ்ணன்( திமுக):அங்காளம்மன் கோயில் தெருவில் உள்ள கால்வாய்களை சீரமைக்க  வேண்டும். பிளாஸ்டிக் பயன்படுத்தும் ஓட்டல், டீக்கடைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அங்காளம்மன் கோயில் அருகில் உள்ள புதிய கழிவறையை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரவேண்டும்.

கோல்டு மணி (திமுக): எனது வார்டில் விவேகானந்தா தெரு,  பாலாஜி நகர் பகுதிகளில்  சாலை வசதி, கழிவுநீர் கால்வாய் அமைக்க வேண்டும் என்று 4 கூட்டத்தில் மனு கொடுத்தேன். ஆனால்  இதுவரை நடவடிக்கை இல்லை. மின்வாரிய அலுவலகத்தில் வேகத்தடை அமைக்க வேண்டும்.செயல் அலுவலர் மாலா, பேரூராட்சி தலைவர் ரஷீத்,  துணைத் தலைவர் குமரவேல் ஆகியோர் பேசும்போது, ‘’இங்கு கவுன்சிலர்கள் வைத்துள்ள கோரிக்கைகள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர். கூட்டத்தில் கவுன்சிலர்கள் ஆனந்தி சிவக்குமார்,  கல்பனா பார்த்திபன்,  இந்துமதி, வெங்கடேசன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: