ரூ.1 கோடி செம்மரக்கட்டைகள் பறிமுதல்: 6 பேர் அதிரடி கைது

திருமலை: திருப்பதியில் 2 இடங்களில் நடந்த சோதனையில் ரூ.1 கோடி மதிப்பிலான செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 6பேரை போலீசார் கைது செய்தனர். செம்மரக்கட்டை கடத்தல் தடுப்பு ரோந்து பணியில் நேற்று தனிப்படை போலீசார் ஈடுபட்டனர். திருப்பதி ராஜம்பேட்டை குட்டரல்லா தோவா என்ற இடத்தில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த கடத்தல்காரர்கள் செம்மரக்கட்டைகளை வனப்பகுதியில் வீசிவிட்டு தப்பினர். இதையடுத்து போலீசார் அப்பகுதிக்கு விரைந்து சென்று 25 செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்தனர்.

இதேபோல் ஏர்பேடு மண்டலம் பாப்பாநாயுடுபேட்டை பகுதியில் நடந்த சோதனையின்போது அவ்வழியாக 3 பைக்குகளில் வந்த 6பேரை பிடித்து விசாரித்தனர். அவர்கள், திருப்பதியை சேர்ந்த மாரையா(25), சிவக்குமார்(26), சண்முகம்(32), வெங்கடேஷ்(30), அகுலாபிரபாகர்(40), வெங்கடேஷ்(24) ஆகியோர் என்பது தெரிய வந்தது. இவர்கள் செம்மரக்கட்டைகளை கடத்துவதற்காக பதுக்கி வைத்துவிட்டு போலீசார் ரோந்து பணியை கண்காணித்துள்ளனர் என தெரிய வந்தது. இதையடுத்து கடத்தலுக்காக மறைத்து வைத்திருந்த 23 செம்மரக்கட்டைகள் மற்றும் பைக்குகளை பறிமுதல் செய்யப்பட்டது. 2 இடங்களில் பறிமுதல் செய்யப்பட்டசெம்மரக்கட்டைகளின் மதிப்பு ₹1 கோடி ஆகும்.

Related Stories: