பாஜக குடியரசு தலைவர் வேட்பாளர் திரெளபதி முர்மு புதுவை முதலமைச்சரை சந்தித்து ஆதரவு திரட்டினார்!!

புதுச்சேரி: குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் விரைவில் நிறைவடைகிறது. இதையடுத்து புதிய குடியரசு தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் வரும் 18ம் தேதி நடக்கிறது. இதில் எம்பிக்கள், எம்எல்ஏக்கள் வாக்களிக்கின்றனர். 21ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.இத்தேர்தலில் தேஜ கூட்டணி சார்பில் பாஜக வேட்பாளராக திரெளபதி முர்மு, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா ஆகியோர் போட்டியிடுகின்றனர். பாஜ வேட்பாளர் திரெளபதி முர்மு ஒவ்வொரு மாநிலமாக சென்று தனக்கு ஆதரவு திரட்டி வருகிறார்.

அதன்படி, இன்று புதுச்சேரியில் திரெளபதி முர்மு அறிமுக கூட்டம் தனியார் ஒட்டலில் நடந்தது. இதில் பங்கேற்பதற்காக டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் மதியம் 11.40 மணிக்கு புதுச்சேரி லாஸ்ேபட்டை விமான நிலையம் வந்தடைந்தார். அவருக்கு முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், சாய் சரவணன்குமார் உள்ளிட்ட அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் பூங்கொத்து கொடுத்து சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

தொடர்ந்து அங்கிருந்து கார் மூலம் புறப்பட்ட வேட்பாளர் முர்மு, அறிமுக கூட்டம் நடைபெறும் தனியார் ஓட்டலுக்கு வந்தார். அங்கு முர்மு ஆதரவு திரட்டினார். இந்தக் கூட்டத்தில், மத்திய அமைச்சர் முரளிதரன்,  இணை அமைச்சர் எல்.முருகன், பாஜக மகளிர் அணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் எம்எல்ஏ, புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, அமைச்சர்கள் நமச்சிவாயம், சாய் சரவணன்குமார், செல்வகணபதி எம்பி, என்.ஆர்.காங்கிரஸ், பாஜக, சுயேச்சை எம்எல்ஏக்கள், அதிமுக மாநில செயலாளர்கள் அன்பழகன், ஓம்சக்தி சேகர், பாஜக தலைவர் சாமிநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

புதுச்சேரி மாநிலத்தில் பாஜ வேட்பாளர் திரெளபதி முர்முவுக்கு ஒரு எம்பி, என்.ஆர் காங்கிரசில் 10 எம்எல்ஏக்கள், பாஜகவில் 6 எம்எல்ஏக்கள் மற்றும் அங்காளன், சிவசங்கர், பிரகாஷ்குமார், கொல்லப்பள்ளி அசோக் உள்ளிட்ட 4 சுயேச்சை எம்எல்ஏக்கள் என மொத்தம் 20 எம்எல்ஏக்கள் ஆதரவு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: