கலெக்டரிடம் விவசாயிகள் புகார் எதிரொலி; மேக்கரை எருமைசாடி நீரோடையில் தடுப்பணை கட்டி ஆக்கிரமிப்பு: பொதுப்பணித்துறை, வனத்துறை அதிகாரிகள் ஆய்வு

செங்கோட்டை: மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் இருந்து வரும் மேக்கரை எருமைசாடி நீரோடைகளை ஆக்கிரமித்து தடுப்பணை கட்டி நீர்நிலை ஆக்கிரமித்தது குறித்து விவசாயிகள் கலெக்டரிடம் புகார் அளித்ததின் எதிரொலியாக வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் பொதுப்பணித்துறை, வனத்துறை அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தார்.

தென்காசி மாவட்டம் செங்கோட்டை தாலுகாவிற்கு உட்பட்ட மேக்கரை வனப்பகுதிகளிலிருந்து நீரோடைகள் பாய்ந்து அடவிநயினார் அணை மற்றும் பண்பொழி, இலத்தூர், சீவநல்லூர், கரிசல் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நீர்நிலைகளுக்கும், அனுமன் நதிக்கும் செல்கிறது. இதன்மூலம் விவசாயத்திற்கு அந்த நீர் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், மேக்கரை பகுதியில் நீர் வழித்தடங்களை மறித்து சிலர் தடுப்பணை போல் அமைத்து நீர்வீழ்ச்சிகளாக உருவாக்கி அதனைச் சுற்றிலும் வேலிகள் அமைத்து குளிக்க பயன்படுத்தி வருகின்றனர்.

விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் தண்ணீரில் சோப்பு உள்ளிட்ட கழிவுகள் கலந்து விளைநிலங்கள் பாதிக்கப்படுவதாகவும், இங்குள்ள கட்டிடங்களில் தங்கும் சுற்றுலா பயணிகளில் மதுபிரியர்கள் பயன்படுத்தும் மதுபாட்டில்கள் பல உடைக்கப்பட்டு வனவிலங்குகள், விவசாயிகளின் கால்களை பதம் பார்க்கும் நிலையில் உள்ளது. இதனால் விவசாயிகள் நிலங்களில் கால் வைக்க முடியாத நிலை உள்ளதாக குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டரிடம் புகார் அளித்தனர்.

இதுகுறித்து கடந்த முறை நடந்த குறைதீர் கூட்டத்தின் போது வடகரை விவசாயிகள் தென்காசி கலெக்டரிடம் முறையிட்டனர்.இந்நிலையில், நேற்று கலெக்டர் உத்தரவின் பேரில் தென்காசி மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் மற்றும் பொதுப்பணித்துறை, வனத்துறை அதிகாரிகள் முன்னிலையில் மேக்கரை பகுதியை ஒட்டியுள்ள மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதிகளில் இருந்து வரும் நீரோடைகளில் கட்டியுள்ள தடுப்பணைகள் குறித்து விசாரணை நடத்தினர்.

அப்போது 20க்கும் மேற்பட்டவர்கள் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் இருந்து வரும் நீரோடைகளில் தடுப்பனை கட்டி அதை நீர்வீழ்ச்சிகளாக பயன்படுத்தியது தெரியவந்தது. மேலும் நீரோடைகளை சுற்றிலும் தடுப்புகள் அமைத்து பொதுமக்கள் யாரும் இந்த நீரினை பயன்படுத்த முடியாதபடி தடுப்பு வேலைகள் அமைத்திருப்பது தெரியவந்தது. இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட வருவாய் கோட்டாட்சியர் இதுகுறித்த அறிக்கையை மாவட்ட ஆட்சித் தலைவர் ஒப்புதலுக்கு அளித்து அதன் பின்னர் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

ஆய்வில் ஆர்டிஓ கங்காதேவி, செங்கோட்டை தாசில்தார் கந்தசாமி மண்டல துணை வட்டாட்சியர் குமார், அச்சன்புதூர் பேரூராட்சி செயல் அலுவலர் தமிழ்மணி பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சிவகுமார் உதவி செயற்பொறியாளர் ராஜேந்திரன் இளம் பொறியாளர் பாலசுப்ரமணியன் மற்றும் வனத்துறை அதிகாரிகள் கிராம நிர்வாக அலுவலர்கள், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்க மாநில துணைத்தலைவர் வடகரை ஜாகிர் உசேன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

கடந்த 10 ஆண்டுகளாக நீர்நிலை ஆக்கிரமிப்புகள் குறித்து இப்பகுதி பொதுமக்களும் விவசாயிகளும்  புகார் அளித்து வந்த நிலையில் அதிமுக அரசு  எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், தற்போது  ஆட்சிக்கு வந்த திமுக அரசு ஒரு வருடத்தில் விசாரணைக்கு உத்தரவிட்டதால்  அரசுக்கும், மாவட்ட கலெக்டருக்கும் நன்றி தெரிவித்தனர்.

Related Stories: