ராஜஸ்தானில் இருந்து கொண்டு வந்து நடுத்தெருவில் விட்டுச் சென்ற 18 ஒட்டகங்கள் ஓசூரில் மீட்பு: கோசாலையில் ஒப்படைக்க நடவடிக்கை

ஓசூர்: ராஜஸ்தானில் இருந்து கொண்டு வரப்பட்டு, ஓசூரில் நடுத்தெருவில் விட்டுச் சென்ற 18 ஒட்டகங்களை போலீசார் மீட்டனர். பக்ரீத் பண்டிகையையொட்டி, குர்பானி கொடுப்பதற்காக ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து நாட்டின் பல்வேறு இடங்களுக்கு விதி மீறி ஒட்டகங்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருவதாக புகார் எழுந்தது. கர்நாடக மாநிலத்தில் மிருக வதை தடை சட்டம் அமலில் இருப்பதால், பெங்களூரு பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்ட 18 ஒட்டகங்களை, கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சி பகுதிக்கு கொண்டு வந்திருப்பதாக, போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில், அப்பகுதிக்கு போலீசார் விரைந்து சென்றனர்.

அதனை அறிந்ததும், ஒட்டகங்களை அப்படியே விட்டு விட்டு அதன் உரிமையாளர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். இதையடுத்து, 18 ஒட்டகங்களை போலீசார் பாதுகாப்பாக மீட்டு, தனியார் இடத்தில் பாதுகாப்பாக கட்டி வைத்தனர்.இந்நிலையில், அந்த ஒட்டகங்களை கர்நாடக மாநிலம் பெங்களூரு கோரமங்களா பகுதியில் உள்ள ஒரு கோசாலையில் ஒப்படைக்க, ஓசூர் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன்படி, கர்நாடக பிராணிகள் தயா சங்க கோசாலையின் செயலாளர் சுனில்துகர் என்பவருக்கு, ஓசூர் மாநகராட்சி ஆணையாளர் பாலசுப்பிரமணியன் கடிதம் எழுதி, ஒட்டகங்களை அங்கு அனுப்ப அனுமதி கேட்டுள்ளார்.

இதுகுறித்து ஹட்கோ போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கவேல் கூறுகையில், ‘இந்த ஒட்டகங்களை சவாரிக்காக அழைத்து வந்ததாக, ராஜஸ்தான் மாநில ஒட்டக உரிமையாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட  ஒட்டகங்களை ஓசூர் நகராட்சி நிர்வாகம் மூலம் பெங்களூரு பகுதியில் உள்ள கோசாலைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,’ என்றார்.இதுதொடர்பாக நகராட்சி ஆணையாளர் பாலசுப்ரமணியிடம் கேட்டபோது, ‘அனைத்து ஒட்டகங்களும் பத்திரமாக மீட்கப்பட்டு உணவுகளை வழங்கி வருகிறோம். நாளை(இன்று) அல்லது மறுநாள் கர்நாடக மாநிலத்தில் உள்ள கோசாலைக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,’ என்றார்.

Related Stories: