சாலை விபத்துக்களில் ஒரு ஆண்டில் 435 பேர் பலி: வாகனங்களின் வேகத்தை கண்காணிக்க போலீசார் அதிரடி நடவடிக்கை

நெல்லை: நெல்லை, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கடந்த 2021 ஜூன் முதல் 2022 ஜூன் வரை ஓராண்டில் நடந்த சாலை விபத்துக்களில் 435 பேர் உயிரிழந்துள்ளனர். எனவே சாலைகளில் ஒவ்வொரு வாகனத்தின் வேகம் கண்காணிக்க உள்ளதாக போலீஸ் உயர் அதிகாரி தெரிவித்தார். அத்துடன் விபத்துகளை குறைக்க தென் மாவட்ட எஸ்பிக்கள் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளனர்.

நம் நாட்டில் கடந்த 2020ம் ஆண்டில் நடந்த சாலை விபத்துகளில் இருசக்கர வாகனத்தில் சென்ற 56,873 பேர் உயிரிழந்துள்ளனர். எனவே, விபத்துகளை குறைக்கும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஒன்றிய, மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகின்றன. இந்தியாவில் நாளுக்குநாள் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. முன்பு வீட்டில் ஒரு வாகனம் மட்டுமே இருந்த நிலை மாறி தற்போது ஒவ்வொருவருக்கும் ஒரு வாகனம்உள்ளது. காலநிலை மாற்றத்தில் அனைவருக்கும் வாகனம் அத்தியாவசியமான ஒன்றுதான் என்றாலும் மற்றொருபுறம் இவற்றால் ஏற்படும் பாதிப்புகளும் அதிக அளவில் உள்ளது.

இவ்வாறு வாகனங்கள் அதிக அளவில் இயக்கப்படுவதால் நகர்ப்புறங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் அவற்றில் இருந்து வெளியேறும் நச்சு கலந்த புகை சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் உள்ளது. இத்தகைய வாகனங்களை இயக்கக்கூடிய பலர் போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிப்பதில்லை. குறிப்பாக, மொபைல் போனில் பேசிக் கொண்டு வாகனம் ஓட்டுதல், மது அருந்திவிட்டு பயணித்தல், சாலை விதிகளை மதிக்காமல் பயணித்தல், அதிவேகத்தில் செல்லுதல், தலைகவசம், சீட் பெல்ட் அணியாதது போன்றவற்றின் காரணமாக வாகன ஓட்டிகள் பலர் விபத்தில் சிக்கிக்கொள்கின்றனர். இதனால் சம்பந்தப்பட்ட வாகன ஓட்டிகள் மட்டும் அல்லாது அவர்களை சார்ந்த குடும்பத்தினரும் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இருசக்கர வாகனத்தில் பயணிப்பவர்களே அதிக அளவு விபத்தில் சிக்கி உயிரிழப்பை சந்திக்கின்றனர். கடந்த 2019ம் ஆண்டில் நிகழ்ந்த 4,49,002 விபத்துகளில் 1,51,113 பேர் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்தோரில் இருசக்கர வாகனத்தில் பயணித்தவர்களே அதிகம்.

2019ம் ஆண்டில் மட்டும் 1,67,184 இருசக்கர வாகன விபத்துகள் நடந்துள்ளன. இதில் 56,136 பேர் இறந்துள்ளனர். இதற்கு அடுத்தபடியாக 59,929 பாதசாரிகள் விபத்தில் சிக்கியுள்ளனர். இப்படி சிக்கியவர்களில் 25,858 பேர் உயிரிழந்துள்ளனர். இதேபோல் 2020ம் ஆண்டில் மொத்தமாக 3,66,138 விபத்துகள் நடந்துள்ளன. இதில் 1,31,714 பேர் இறந்துள்ளனர். இதில் இருசக்கர வாகனத்தில் பயணித்த 1,58,964 பேர் விபத்தில் சிக்கியுள்ளனர். இதில் 56,873 பேர் உயிரிழந்துள்ளனர். இதேபோல் சம்பந்தப்பட்ட ஆண்டில் 57,763 பாதசாரிகள் விபத்தில் சிக்கியுள்ளனர். அவர்களில் 23,477 பேர் இறந்துள்ளனர். எனவே இதனை கட்டுப்படுத்துவதற்கு அரசு அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். குறிப்பாக தமிழகத்தில் அவ்வப்போது தீவிர வாகன சோதனை மேற்கொள்ளப்படுகிறது. அப்போது மது அருந்தி விட்டு வாகனத்தை இயக்குவோர், அதிவேகத்தில் வாகனத்தை இயக்குவோர், தேவையற்ற சத்தம் ஏற்படும் வகையிலான ஒலிபெருக்கிகளை பயன்படுத்துவோர் பிடிக்கப்பட்டு அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

மேலும் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து செல்வோரும் கட்டாயம் தலைகவசம் அணிய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதேபோல் அதிக அளவில் விபத்து நடக்கும் இடங்களை கண்டுபிடித்து, அந்த இடங்களில் எதனால் சாலைவிபத்து ஏற்படுகிறது என்பது கண்டறியப்படுகிறது. பிறகு அந்த இடங்களில் வேகத்தடைகள் அமைப்பது, முன்கூட்டியே விபத்து பகுதி என வாகன ஓட்டிகளுக்கு அறிவிக்கும் வகையில் அறிவிப்பு பலகைகள் வைப்பது, எச்சரிக்கை விளக்குகள் அமைப்பது போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்காமல் வாகனங்களை இயக்குவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு நாடகங்களை போக்குவரத்துத்துறை நடத்தி வருகிறது.

 இதுதவிர பள்ளி, கல்லூரி மாணவர்களிடத்திலும் சாலைவிதிகளை கடைபிடிக்க வேண்டியதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு நடவடிக்கை  மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 

நெல்லை மாவட்டத்தைப் பொருத்தவரை கடந்த 2021ம் ஆண்டு ஜூன் முதல் 2022ம் ஆண்டு ஜூன் வரையில் 474 விபத்து வழக்குகள் பதிவாகியுள்ளன. இதில் 160 பலியாகியுள்ளனர். 314 பேர் காயமடைந்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் பதிவான 355 விபத்து வழக்குகளில் 150 பேர் இறந்தனர். 205 பேர் காயமடைந்துள்னர்.

தென்காசி மாவட்டத்தில் பதிவான 310 விபத்து வழக்குகளில் 115 பேர் உயிரிழந்தனர். 195 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதில் சுமார் 68 சதவீதம் இரு சக்கர வாகன ஓட்டிகள் பலியாகியுள்ளதாக புள்ளி விவரம் தெரிவிக்கிறது. மேலும் சாலை விபத்துக்களை தடுக்க எஸ்பிக்கள் நெல்லை சரவணன், தூத்துக்குடி பாலாஜி சரவணன், தென்காசி கிருஷ்ணராஜ் ஆகியோர் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை அவ்வப்போது நடத்தி  வாகனத்தில் அதிவேகமாக செல்லும் ஓட்டுநர்கள், குடிபோதை, செல்போனில் பேசியபடி செல்லும் ஓட்டுநர்கள் மீது வழக்குப்பதிந்து வருகின்றனர். மேலும் விரைவில் சாலைகளில் அதிகமாக வேகமாக செல்லும் அனைத்து வாகனங்களையும் கண்காணித்து அபராதம் விதிக்கப்படும் என போலீஸ் உயர் அதிகாரி தெரிவித்தார்.

Related Stories: