அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பிறவி குறைபாடு குழந்தைகளின் சிகிச்சைக்கு உணர்திறன் பூங்கா: பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்று நம்பிக்கை

சேலம்: சேலம் அரசு மருத்துவமனையில் பிறவி குறைபாடு கொண்ட குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் உணர்திறன் சிகிச்சை பூங்கா அமைக்கப்படுகிறது. இதன்மூலம் பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்று மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

சேலம் அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆரம்ப நிலை இடையீட்டு மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தின் மூலம் குழந்தைகளுக்கு பிறவிலேயே ஏற்படும் குறைபாடுகள், நோய்கள், குறைபாடு நிலைமை மற் றும் வளர்ச்சி தாமதங்கள் உள்ளிட்டவை முன் கூட்டியே கண்டறிந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, பிறப்பு முதல் 18 வயது வரையிலான குழந்தைகள் இதில் அடங்குவார்கள். அதன்படி, மாவட்ட ஆரம்ப நிலை இடையீட்டு மையத்தின் கீழ் 20 வட்டாரங்களிலும் மருத்துவ குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த மருத்துவ குழுவினர் அங்கன்வாடி மையங்கள், பள்ளிகள் போன்ற இடங்களில் முகாம்கள் நடத்தி குழந்தைகளுக்கு பரிசோதனை மேற்கொள்வார்கள். இதில் பிறவி குறைபாடுகள், வளர்ச்சி குறைபாடுகள் கொண்ட குழந்தைகளை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்து சிகிச்சை அளிக்கப்ப டும். இதற்கிடையே குழந்தைகளுக்கு உணர்திறன் சிகிச்சை அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதற்காக, சேலம் அரசு மருத்துவமனை வளாகத்தில் ₹14 லட்சம் மதிப்பீட்டில் உணர்திறன் சிகிச்சை பூங்கா அமைப்பதற்கான பணிகள்  இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

இதுகுறித்து மருத்துவர்கள் கூறியதாவது: சேலம் அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளின் பிறவி குறைபாடுகள், வளர்ச்சி குறைபாடுகள் கண்டறியப்படுகிறது. இதையடுத்து குழந்தைகளுக்கு உணர்திறன் சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த சிகிச்சையில் பார்த்தல், கேட்டல், சுவைத்தல், நுகர்தல் மற்றும் தொடு உணர்வு ஆகிய புலன்கள் ஒருங்கிணைக்கப்படும். தொடு உணர்வு மற்றும் கேட்டல் திறனை மேம்படுத்தும் பாதை, பெருந்தசை வளர்ச்சி மற்றும் ஒருங்கிணைப்பு பகுதி, உடல் சமநிலை, தசை வளர்ச்சி மேம்பாடு மற்றும் அசைவு உணர்வு ஒருங்கிணைப்பு பகுதிகளும் கண்டறியப்படும்.

இதன் மூலம் குழந்தைகளின் பாதிப்புகள் குறித்து எளிதாக தெரிந்து கொள்ள முடியும். தொடர்ந்து, குழந்தைகளுக்கு மேல் சிகிச்சை அளிக்கப்படும். இதற்காக அரசு மருத்துவமனை வளாகத்தில் ₹14 லட்சம் மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த உணர்திறன் சிகிச்சை பூங்கா அமைப்பதற்காக இறுதி கட்ட பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகள் ஓரிரு மாதங்களில் முடிவடைந்த பிறகு விரைவில் திறக்கப்படும். இந்த பூங்கா அமைவதால் குழந்தைகளின் பல்வேறு குறைபாடுகளுக்கு உரிய தீர்வு கிடைக்கும்.

இவ்வாறு மருத்துவர்கள் கூறினர்.

Related Stories: