விராலிமலை அருகே காவிரி குடிநீர் ராட்சத குழாய் உடைப்பு: அதிகாரிகள் அலட்சியத்தால் வீணாகும் நீர் வயலுக்கு பாய்கிறது

விராலிமலை: புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை மாவட்டங்களுக்கான காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் கடந்த 2009ம் ஆண்டு கடந்த திமுக ஆட்சியில் ரூ.616 கோடி திட்ட மதிப்பில் செயல்படுத்தப்பட்டது. அதன்படி திருச்சி அருகேயுள்ள முக்கொம்பு முத்தரசநல்லூர் காவிரி ஆற்றில் 4 கிணறுகள் அமைக்கப்பட்டு அங்கிருந்து இனாம்குளத்தூர், விராலிமலை, இலுப்பூர், அன்னவாசல் வழியாக புதுக்கோட்டை, ராமநாதபுரம் செல்கிறது. இந்நிலையில் விராலிமலை-புதுக்கோட்டை சாலை கொடிக்கால்பட்டி அருகே குடிநீர் இணைப்பு வால்வு அமைக்கப்பட்டுள்ள தொட்டியில் உள்ள குழாயில் உடைப்பு ஏற்பட்டு மளமளவென்று காவிரி குடிநீர் வீணாகி வெளியேறி வருகிறது. இதுகுறித்து ராமநாதபுரம் கூட்டு குடிநீர் திட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் கண்டுகொள்ளாததால் அதை தனியார்கள் விவசாயத்திற்கு பயன்படுத்துகின்றனர்.

கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக வெளியேறி வரும் காவிரி குடிநீர் குழாயை சரிசெய்ய அதிகாரிகள் முன்வராததும் வீணாகும் தண்ணீர் குறித்து அதிகாரிகள் கண்டுகொள்ளாததால், அப்பகுதி விவசாயிகள் சிலர், வயல்வெளிகளுக்கு அந்த குடிநீரை திருப்பிவிட்டு, விவசாயம் செய்து வருகின்றனர்.

இவ்வாறாக வெளியேறும் நீர் சாலையோரம் ஓடி வீணாகாமல் விவசாயத்திற்கு பயன்பட்டாலும், பொதுமக்களுக்கு கிடைக்க வேண்டிய உரிய அளவு காவிரி நீர் கிடைக்காமல் கேன் தண்ணீரை விலை கொடுத்து வாங்கும் நிலைக்கு தள்ளப்படும் சூழல் உருவாகி உள்ளது. இதை கருத்தில் கொண்டு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் தற்போதைய எதிர்பார்ப்பாகும்.

Related Stories: