பட்டுக்கோட்டையில் தலைமுடியால் வேனை 110 மீட்டர் தூரம் இழுத்து பள்ளி மாணவி உலக சாதனை

பட்டுக்கோட்டை: தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை ஆர்வி நகர் என்ஜிஜிஓ காலணியை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவரது மனைவி ஆஷா. இவர்களது மகள் சம்யுக்தா (12). பட்டுக்கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருகிறார். பட்டுக்கோட்டையில் நேற்று நடந்த உலக சாதனை நிகழ்ச்சியில் சம்யுக்தா, தன்னுடைய தலைமுடியினால் வேன் ஒன்றை 110 மீட்டர் தூரம், 1நிமிடம் 10 வினாடியில் இழுத்து சென்று ஆசியாவிலேயே முதல் முறையாக உலக சாதனை படைத்தார்.

முன்னதாக நிகழ்ச்சியை மாவட்டக்கல்வி அலுவலர் திராவிடச்செல்வம், நகராட்சித்தலைவர் சண்முகப்பிரியா ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். உலக சாதனை படைத்த மாணவி சம்யுக்தாவுக்கு அவரது பயிற்சியாளர் இளையராஜா, சமூக ஆர்வலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மாலை அணிவித்தும், சால்வை அணிவித்தும் பாராட்டினர்.

உலக சாதனை அமைப்பின் பொறுப்பாளர் சரிபா, இதற்கான சான்றிதழை வழங்கினார். இந்த சாதனையை நிகழ்த்தியதன் மூலம் 12 வயதிற்குட்பட்டவர்களில் ஆசியாவிலேயே முதல் முறையாக சாதனை படைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து மாணவி சம்யுக்தா கூறுகையில், இந்த சாதனைக்கு காரணமாக இருந்த எனது பயிற்சியாளர் இளையராஜா, பெற்றோர் மற்றும் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியை, வகுப்பு ஆசிரியை உள்ளிட்ட அனைத்து ஆசிரியைகளுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். கொரோனா காலத்தில் தங்களது உயிரையும் பணயம் வைத்து ஏராளமான பொதுமக்களின் உயிரை காத்த டாக்டர்களுக்கும், நர்சுகளுக்கும் உலக டாக்டர்கள் தினத்தில் இந்த சாதனையை சமர்ப்பணம் செய்கிறேன் என்றார்.

Related Stories: