சென்னை பெருநகரில் கடந்த ஒரு வாரத்தில் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் 9 குற்றவாளிகள் கைது; பெருநகர காவல்துறை நடவடிக்கை

சென்னை: சென்னை பெருநகரில் 9 குற்றவாளிகள் கடந்த ஒரு வாரத்தில் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். நடப்பாண்டில் இதுவரை 180 குற்றவாளிகள் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது. ஒரு வாரத்தில் நன்னடத்தை பிணை பத்திரத்தை மீறி மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபட்ட 10 குற்றவாளிகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சென்னை பெருநகரில், குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்யவும், குற்றச் செயல்கள் நடவாமல் தடுக்கவும், பல்வேறு குற்றத்தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

மேலும், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப அவர்களின் உத்தரவின்பேரில், குற்றவாளிகளின் தொடர்ச்சியான நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்கள், கொலை, கொலை முயற்சி குற்றங்களில் ஈடுபடுபவர்கள், திருட்டு, செயின் பறிப்பு, சைபர் குற்றங்களில் ஈடுபடுபவர்கள், போதைப் பொருட்கள் கடத்துபவர்கள், கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டு மிரட்டி பணம் பறிப்பவர்கள், நில அபகரிப்பு, ஆபாச வீடியோ தயாரிப்பு, மணல் கடத்தல், உணவு பொருட்கள் கடத்தல், போக்சோ மற்றும் பாலியல் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகள், கொரோனா நோய் பாதிப்பில் உயிர்காக்கும் மருந்துகளை பதுக்கி விற்பவர்கள் ஆகியோரை தீவிரமாக கண்காணித்து குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கடந்த 01.01.2022 முதல் 01.07.2022 வரை சென்னை பெருநகரில், கொலை, கொலை முயற்சி மற்றும் பொது அமைதிக்கு பங்கம் விளைவித்த குற்றங்களில் ஈடுபட்ட 119 குற்றவாளிகள், திருட்டு, சங்கிலி பறிப்பு, வழிப்பறி மற்றும் பணமோசடி குற்றங்களில் ஈடுபட்ட 41 குற்றவாளிகள், கஞ்சா மற்றும் போதை பொருடகள் விற்பனை செய்த 12 குற்றவாளிகள், பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்திய 4 குற்றவாளிகள், பெண்களை மானபங்கம் செய்த 2 குற்றவாளிகள், சைபர் குற்றத்தில் ஈடுபட்ட 1 குற்றவாளி மற்றும் உணவு பொருள் கடத்தல் பிரிவில் கைது செய்யப்பட்ட 1 குற்றவாளி என மொத்தம் 180 குற்றவாளிகள் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் உத்தரவின்பேரில், குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து 1.ஜோதிகுமார், வ/34, த/பெ.பரசுராமன், எண்.61/62, பிரிக்ளின் ரோடு, சாலைமாநகர், புரசைவாக்கம், சென்னை என்பவர் மத்திய அரசு, மாநில அரசு மற்றும் வங்கிகளில் வேலை வாங்கி தருவதாக கூறி பல நபர்களிடம் பணம் பெற்று மோசடி செய்தது தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு, வேலை வாய்ப்பு மோசடி தடுப்பு பிரிவில் வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். 2.பாலா (எ) பாலமுருகன் (எ) மதுரை பாலா, வ/32, த/பெ.மூர்த்தி, எண்.3, பல்லாவரம், சென்னை என்பவர் மீது 2 கொலை வழக்கு உள்ள நிலையில், வழிப்பறி செய்த குற்றத்திற்காக G-7 சேத்துப்பட்டு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டார்.

3.பிரதீப், வ/26, த/பெ.மோகன் (எ) தர்கா மோகன், எண்.253, எப்-பிளாக், நாவலர் நெடுஞ்செழியன் காலனி, சிந்தாதிரிப்பேட்டை, சென்னை என்பவர் மீது 12 கொலை முயற்சி வழக்குகள் உட்பட சுமார் 19 குற்ற வழக்குகளும், இவரது சகோதரர் 4.சஞ்சய், வ/24, த/பெ.மோகன் (எ) தர்கா மோகன், நாகவலர் நெடுஞ்செழியன் நகர், சிந்தாதிரிப்பேட்டை என்பவர் மீது 1 கொலை முயற்சி வழக்கு உட்பட 7 வழக்குகளும், 5.கலை (எ) கலைராஜ், வ/28, த/பெ.கண்ணன், எண்.253, நாவலர் நெடுஞ்செழியன் நகர், சிந்தாதிரிப்பேட்டை என்பவர் மீது 1 கொலை முயற்சி உட்பட 3 குற்ற வழக்குகளும் உள்ளது.

மேற்படி மூவரும் F-1 சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலைய சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் ஆவர். 6.ஜோதி (எ) ஜோதி கணேஷ், வ/30, த/பெ.ஜான்கென்னடி, எண்.253, நாவலர் நெடுஞ்செழியன் நகர், சிந்தாதிரிப்பேட்டை, சென்னை 7.தினேஷ் (எ) புளிமூட்டை தினேஷ், வ/23, த/பெ.சேகர், எண்.185, நாவலர் நெடுஞ்செழியன் நகர், சிந்தாதிரிப்பேட்டை, சென்னை என்பவர் மீது  3 கொலை முயற்சி வழக்கு உட்பட 6 வழக்குகள் உள்ள  நிலையில், மேற்படி 5 நபர்களும் சேர்ந்து கடந்த 24.05.2022 அன்று சிந்தாதிரிப்பேட்டை பகுதியில் பாலச்சந்தர் என்பரை கொலை செய்த குற்றத்திற்காக F-1 சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் கொலை உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

மேற்படி குற்றவாளிகளின் குற்றச் செயல்களை கட்டுப்படுத்த, ஜோதிகுமார் என்பவரை குண்டர் தடுப்புக்காவல் சட்டத்தில் கைது செய்ய மத்திய குற்றப்பிரிவு வேலை வாய்ப்பு மோசடி தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளரும், பாலா (எ) பாலமுருகன் (எ) மதுரை பாலா என்பவரை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்ய G-7 சேத்துப்பட்டு காவல் நிலைய ஆய்வாளரும், பிரதீப், சஞ்சய், கலை (எ) கலைராஜ், ஜோதி (எ) ஜோதி கணேஷ், தினேஷ் (எ) புளி மூட்டை தினேஷ் ஆகிய 5 நபர்களை குண்டர் தடுப்புக்காவல் சட்டத்தில்  கைது செய்ய F-1 சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலைய ஆய்வாளரும் பரிந்துரை செய்ததின்பேரில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப அவர்கள் மேற்படி 7 நபர்களையும் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க கடந்த 28.06.2022 அன்று உத்தரவிட்டார்.

அதன்பேரில் மேற்படி 7 நபர்களும் சிறையில் அடைக்கப்பட்டனர். டேவிட் (எ) கெவின்ராஜ் (எ) ஜான் சாலமோன், வ/30, த/பெ.அமல்ராஜ், எண்.11 சி, டவர் F-1, ஒலிம்பியா கிராண்ட், பல்லாவரம் என்பவர் மீது போலியாக கன்டெய்னர் நிறுவனங்கள் நடத்தி பல கோடி மோசடி செய்த குற்றத்திற்காக மத்திய குற்றப்பிரிவு ஆவணங்கள் மோசடி புலனாய்வு பிரிவில் (EDF-3) வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். மேற்படி குற்றவாளி டேவிட் (எ) கெவின்ராஜ் (எ) ஜான் சாலமோன் என்பவரின் குற்றச்செயலை கட்டுப்படுத்த இவரை குண்டர் தடுப்புக்காவல் சட்டத்தில் கைது செய்ய   ஆவணங்கள் மோசடி புலனாய்வு பிரிவு காவல் ஆய்வாளர் பரிந்துரை செய்ததின்பேரில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப அவர்கள் மேற்படி டேவின் (எ) கெவின்ராஜ் (எ) ஜான் சாலமோன் என்பவரை குண்டர் தடுப்புக்காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க கடந்த 29.06.2022 அன்று உத்தரவிட்டதின்பேரில் சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் பாலசுப்ரமணியன், வ/55,/பெ.தாமோதரன், திருத்துறைபூண்டி ரோடு, முத்துப்பேட்டை, திருவாரூர் மாவட்டம் என்பவர் சட்டவிரோதமாக போலியாக பாஸ்போர்ட் தயாரித்து கொடுத்து வெளிநாட்டுக்கு ஆட்களை அனுப்பியது தொடர்பாக, மத்திய குற்றப்பிரிவு, போலி கடவுச்சீட்டு புலனாய்வு பிரிவில் (Fake Passport) வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். மேற்படி குற்றவாளி பாலசுப்ரமணியன் என்பவரின் குற்றச்செயலை கட்டுப்படுத்த அவரை குண்டர் தடுப்புக்காவல் சட்டத்தில் கைது செய்ய மத்திய குற்றப்பிரிவு போலி கடவுச்சீட்டு புலனாய்வு பிரிவு காவல் ஆய்வாளர் பரிந்துரை செய்ததின்பேரில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப அவர்கள் மேற்படி பாலசுப்ரமணியன குண்டர் தடுப்புக்காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க கடந்த 30.06.2022 அன்று உத்தரவிட்டதின்பேரில் சிறையில் அடைக்கப்பட்டார்.

கடந்த 25.06.2022 முதல் 01.07.2022 வரையிலான ஒரு வாரத்தில், கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 5 குற்றவாளிகள், 1 வழிப்பறி குற்றவாளி, மத்திய குற்றப்பிரிவில், வேலை வாய்ப்பு மோசடி, போலி ஆவணங்கள் மோசடி, போலி பாஸ்போர்ட் மோசடி என 3 வழக்குகளில் 3 குற்றவாளி என மொத்தம்  9 குற்றவாளிகள், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் உத்தரவின்பேரில், குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.    

எனவே சென்னை பெருநகர காவல் குழுவினர் தொடர்ந்து தீவிரமாக கண்காணித்து, பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் நபர்கள், கொலை, கொலை முயற்சி, திருட்டு குற்றங்களில் ஈடுபடும் நபர்கள், கட்டப்பஞ்சாயத்து செய்து பணம் பறித்தல், உயிர்காக்கும் மருந்துகள், போதை மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்கள் பதுக்கி வைத்து விற்பவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல்துறை சார்பாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், குற்ற வழக்குகள் உள்ள நபர்கள், சம்பந்தப்பட்ட செயல்துறை நடுவர்களாகிய துணை ஆணையாளர்கள் முன்பு சாட்சிகளுடன் ஆஜராகி, தான் திருந்தி வாழப்போவதாகவும், இனி 1 வருடத்திற்கு எந்த குற்றச் செயலிலும் ஈடுபடமாட்டேன் எனவும் நன்னடத்தை பிணை பத்திரங்கள் எழுதி கொடுத்தும், மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபட்ட வண்ணாரப்பேட்டை காவல் மாவட்டத்தில் 2 குற்றவாளிகள், புளியந்தோப்பு காவல் மாவட்டத்தில் 3 குற்றவாளிகள், அடையாறு காவல் மாவட்டத்தில் குற்றவாளி, புனித தோமையர்மலை காவல் மாவட்டத்தில் 1 குற்றவாளி, திருவல்லிக்கேணி காவல் மாவட்டத்தில் 3 குற்றவாளிகள், கீழ்பாக்கம் காவல் மாவட்டத்தில் 1 குற்றவாளி என மொத்தம் 10 குற்றவாளிகள் 25.06.2022 முதல் 01.07.2022 வரையிலான ஒரு வாரத்தில்  செயல்துறை நடுவர்களாகிய துணை ஆணையாளர்கள் உத்தரவின்பேரில், பிணை ஆவணத்தில் எழுதிக் கொடுத்த 1 வருட காலத்தில் நன்னடத்தையுடன் செயல்பட்ட நாட்கள் கழித்து மீதமுள்ள நாட்கள் பிணையில் வரமுடியாத சிறை தண்டனை விதிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.

Related Stories: