கோடை கால மழையால் ஊட்டி குடிநீர் ஆதாரங்களில் போதிய நீர் இருப்பு உள்ளது

ஊட்டி :  கோடை காலத்தில் பெய்த மழையில் பார்சன்ஸ்வேலி அணை உட்பட ஊட்டி நகராட்சியின் குடிநீர் ஆதாரங்களில் கணிசமான அளவு நீர் இருப்பு உள்ளது.ஊட்டி நகராட்சிக்குட்பட்ட 36 வார்டுகளுக்கும் நகராட்சியின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பார்சன்ஸ்வேலி அணை விளங்கி வருகிறது. இதுதவிர மார்லிமந்து, டைகர்ஹில் உள்ளிட்ட அணைகள், கோரிசோலை, கோடப்பமந்து உள்ளிட்ட நீர் தேக்கங்களில் இருந்தும் தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது.

இதில் பார்சன்ஸ்வேலி அணைநீர் மின் உற்பத்திக்காக பயன்படுத்தப்படுகிறது. ஊட்டி நகராட்சிக்கென பார்சன்ஸ்வேலி அணையில் இருந்து 3 குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. பருவமழை சமயங்களில் இந்த நீர் நிலைகள் முழு கொள்ளளவை எட்டி விடும். இதனால் ஊட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாது.

நடப்பு ஆண்டில் ஏப்ரல், மே என கோடை காலத்தில் பார்சன்ஸ்வேலி, டைகர்ஹில் பகுதிகளில் நல்ல மழை பெய்ததால் இங்குள்ள அணைகளில் நீர்மட்டம் உயர்ந்தது. இதர நீர்தேக்கங்களிலும் தண்ணீர் இருப்பு கணிசமாக அதிகரித்தது. இதனால் தற்போது வரை ஊட்டி நகருக்கு குடிநீர் விநியோகம் செய்வதில் எவ்வித சிக்கலும் ஏற்படவில்லை. பார்சன்ஸ்வேலி அணையின் மொத்த கொள்ளலவான 50 அடியில் தற்போது 22.60 அடிக்கு நீர் உள்ளது. இதேபோல் மார்லிமந்து அணையில் 11 அடியும், டைகர்ஹில் அணையில் 37 அடியும் நீர் இருப்பு உள்ளது.

இந்நிலையில் நடப்பு ஆண்டில் தென்மேற்கு பருவமழை குறித்த நேரத்தில் துவங்கினாலும், எதிர்பார்த்த அளவிற்கு மழை பொழிவு இல்லை. தற்போது கேரளாவில் தீவிரமடைய துவங்கியுள்ளதால், நீலகிரியிலும் இனி வரும் நாட்களிலும் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாறாக மழை பொய்க்கும் பட்சத்தில் இனிவரும் மாதங்களில் நீர் விநியோகம் செய்வதில் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது.

Related Stories: