கோவை மேம்பால தூண்களில் விழிப்புணர்வு பிரசாரம் போஸ்டர் யுத்தம் இன்றி அழகு பெறும் கோவை நகரம்

கோவை :  கோவை-திருச்சி சாலை மேம்பால தூண்களில் அரசு சார்பில் அதன் திட்டங்கள், போக்குவரத்து விழிப்புணர்வுக்கு ஏற்ற வாசங்கங்கள், பல்வேறு துறை அறிஞர்களின் புகைப்படங்கள் ஆகியவை வரையப்பட்டும், ஒட்டப்பட்டும் வருகின்றன. இதனால் போஸ்டர் யுத்தம் இன்றி கோவை நகரம் அழகு பெறுகிறது.

கோவை மாநகரில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண கோவை-திருச்சி சாலையில் ரூ.250 கோடி செலவில் மேம்பாலம் கட்டும் பணி கடந்த 2019ம் ஆண்டு துவங்கி அண்மையில் நிறைவு பெற்று மக்கள் பயன்பாட்டிற்கு திறந்துவிடப்பட்டுள்ளது. கோவை - திருச்சி சாலையில் ரெயின்போ பகுதியில் துவங்கி பங்கு சந்தை வரை 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு இந்த மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது.

இதற்காக மொத்தம் 111 தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மேம்பாலம் 4 வழிப்பாதையாக 17.20 மீட்டர் அகலத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் சுங்கம் பகுதியில் மட்டும் மேம்பாலத்தின் அகலம் 19.60 மீட்டராக உள்ளது. தற்போது இந்த மேம்பால தூண்களில்அரசு சார்பில் அதன் திட்டங்கள், போக்குவரத்து விழிப்புணர்வுக்கு ஏற்ற வாசங்கங்கள், பல்வேறு துறை அறிஞர்களின் புகைப்படங்கள் ஆகியவை வரையப்பட்டும், ஒட்டப்பட்டும் வருகின்றன. இதனால் அரசியல் கட்சிகள், அமைப்புகள், குடும்ப விழாக்கள் போன்ற போஸ்டர்கள் ஒட்டமுடியாத நிலை உருவாகியுள்ளது. இதனால் மேம்பால தூண்கள் அழகு பெறுகிறது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில், கவுண்டம்பாளையம் சந்திப்பில் ஹவுசிங் யூனிட் முதல் ராமசாமி திருமண மண்டபம் வரை 1.20 கிலோ மீட்டர் நீளம், 17.20 மீட்டர் அகலத்தில் ரூ.66 கோடி மதிப்பில் மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள தூண்களிலும் அழகுப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் சு. பழனிசாமி கூறுகையில், ‘‘கோவை மாநகரில் மக்களின் நலனுக்காக பல கோடி ரூபாய் மதிப்பில் மேம்பாலங்கள் கட்டுப்பட்டுள்ளன. இன்னும் பல இடங்களில் கட்டப்பட்டு வருகின்றன. இதனிடையே இந்த மேம்பால தூண்கள் மற்றும் சுவர்களில் அரசியல் கட்சியினர், தனியார் விளம்பரங்கள், சுவரட்டிகள் போன்றவைகள் ஒட்டப்பட்டால் அந்த மேம்பால அழகே போய்விடும்.

 மேலும் விதிமுறைகளுக்கு மாறாக ஒட்டப்படும் சுவரொட்டிகளால் வாகன ஓட்டிகளிடையே விபத்து ஏற்படவும் வாய்ப்புள்ளது. இது தவிர்க்கப்பட வேண்டும். அரசியல் கட்சிகள் போஸ்டர்கள் ஒட்டாமல் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். மேலும் அரசியல் கட்சிகளுக்கு என விளம்பர இடம் ஒதுக்க வேண்டும். காவல்துறையும் இதனை பின்பற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது மேம்பால தூண்களில் வரையப்பட்டுள்ள விழிப்புணர்வு வாசகங்கள் மிகவும் அழகாக உள்ளது. இதனால் கோவை மாநகரமே அழகு பெறுகிறது’’ என்றார்.

 தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் பட்டதாரி இளைஞர் நியூட்டன் கூறுகையில், ‘‘சென்னைக்கு அடுத்தப்படியாக கோவை உள்ளது. கோவை என்றாலே சிறுவாணி தண்ணீரும், வெப்பநிலையும்தான் முதலில் நியாபம் வரும். தற்போது மேம்பால அழகு பெறுவது பார்த்தால் இனி இதுவும் நியாபகம் வரும். மேம்பால தூண்களில் போஸ்டர்களும், விளம்பரங்களும் ஒட்டாமல் இருக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கோவை மாவட்டத்தில் கட்டப்பட்டு வரும் அனைத்து மேம்பாலங்களிலும் இந்த முயற்சியை மேற்கொள்ள வேண்டும்’’ என்றார். கோவை-திருச்சி மேம்பால தூண்களில் இந்த பணிகள் நிறைவடையும் நிலையில், காந்திபுரம் மேம்பாலம், கவுண்டர்மில்ஸ் மேம்பாலம், பெரியநாயக்கன்பாளையம் மேம்பாலம் ஆகியவற்றிலும் இந்த பணிகள் தொடரப்பட உள்ளன.

இது குறித்து நெடுஞ்சாலைத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண உயர்மட்ட மேம்பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன. கட்டி முடிக்கப்பட்ட இடங்களில் மேம்பால தூண்கள் சுற்றி தடுப்புச்சுவர்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதனால் தள்ளுவண்டி கடைகள், முறையற்ற பார்க்கிங் போன்றவைகள் தடுக்கப்படுகின்றன.

 மேலும் தூண்களில் சுகாதாரம் குறித்தும், அரசின் திட்டங்கள் குறித்தும், போக்குவரத்து விதிமுறைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக சுவர் ஓவியங்கள் வரையப்பட்டு வருகின்றன. மேலும் பல்வேறு துறை அறிஞர்களின் புகைப்படங்கள் தொழில்நுட்ப உதவியுடன் ஒட்டப்பட்டும் வருகின்றன. இதுதவிர காற்று மாசுவை தடுக்க சுவரில் அதிநவீன தொழில்நுட்ப உதவியுடன் மாசுவை தடுக்க உதவும் செடிகள் வளர்க்கப்படும். கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து மேம்பால தூண்களிலும் இந்த முயற்சி மேற்கொள்ளப்படும்’’ என்றார்.

மக்களை முகம் சுளிக்க வைக்கும் போஸ்டர் கலாசாரம் ஒழியவும், மாநகர் அழகு பெறவும் இந்த முயற்சி கைக்கொடுக்கும் என்பதே பெரும்பாலான மக்களின் கருத்தாக உள்ளது.

Related Stories: