கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில் பராமரிப்பில்லாத கட்டண கழிப்பறைகள்: வியாபாரிகள் தவிப்பு

அண்ணாநகர்: ஆசியாவிலேயே மிகப்பெரிய சந்தையாக கோயம்பேடு மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விளையும் காய்கறி, பழங்கள் மற்றும் பூக்களும், மற்ற மாநிலங்களில் விளையும் பொருட்களும் வாகனங்களில் ஏற்றி வந்து இங்கே விற்பனை செய்யப்படுகிறது. இதை வாங்குவதற்கு சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களில் இருந்து ஏராளமான வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் தினசரி கோயம்பேடு மார்க்கெட்டிற்கு வந்து செல்கின்றனர்.

தினசரி லட்சக்கணக்கானோர் வந்து செல்லும் இந்த மார்க்கெட்டில் இயற்கை உபாதைகளை கழிப்பதற்காக சுமார் 54க்கும் மேற்பட்ட கட்டண கழிப்பறைகள் செயல்பட்டு வருகிறது. இவற்றை ஒப்பந்தம் எடுத்துள்ள தனியார் நிறுவனத்தினர், கழிப்பறைகளை முறையாக பராமரிப்பதில்லை. குறிப்பாக, பல கழிப்பறைகளில் கதவுகள், டைல்ஸ், தாழ்ப்பாள், பக்கெட்கள் உடைந்து கிடக்கிறது. பல கழிவறைகள் பயங்கர அசுத்தத்துடன், துர்நாற்றம் வீசுகிறது. இதை பயன்படுத்தும் பொதுமக்களுக்கு சுகாதார கேடு ஏற்படும் நிலை உள்ளது.

ஆனால், கட்டணத்தை மட்டும் முறையாக வசூலிக்கும் ஒப்பந்ததாரர்கள், கழிப்பறை பராமரிப்பில் சுணக்கம் காட்டி வருகின்றனர். துர்நாற்றம் வீசும் கழிவறையை பயன்படுத்த தயங்கும் பலர், மார்க்கெட் வளாகத்தில் திறந்தவெளியில் இயற்கை உபாதைகளை கழிக்கும் அவலம் உள்ளது. இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், ‘‘கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள கட்டண கழிவறைகள் சுத்தம் செய்யப்படாமல் கடும் துர்நாற்றம் வீசுவதால், அதை பயன்படுத்துபவர்களுக்கு சுகாதார கேடு ஏற்படும் நிலை உள்ளது.

அதேபோல், பெண்களுக்கான தனி கழிப்பறை அமைத்து தரக்கோரி பல வருடங்களாக அதிகாரிகளிடம் சொல்லியும் இதுவரை நடவடிக்கை இல்லை. இதனால், இங்கு வரும் பெண் வியாபாரிகள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த கட்டண கழிப்பறைகளில் சிறுநீர் கழிக்க ரூ5, மலம் கழிக்க ரூ10, குளிப்பதற்கு ரூ20 வசூல் செய்து வருகின்றனர். ஆனால், முறையாக பராமரிப்பதில்லை. இதுபற்றி ஒப்பந்ததாரர்களிடம் கேட்டால் அலட்சியமாக பதிலளிக்கின்றனர். கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இலவசமாக கழிப்பறை இயங்கி வருகிறது.

இந்த கழிப்பறைகள் சுத்தமாக உள்ள நிலையில், கோயம்பேடு மார்க்கெட்டில் கட்டண கழிப்பறை சுத்தம் செய்யாமல் துர்நாற்றம் வீசுவது வேதனை அளிக்கிறது. எனவே, கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள கட்டண கழிவறைகளை முறையாக சுத்தம் செய்ய அதிகாரிகள் உத்தரவிட வேண்டும். இலவச கழிப்பறைகளை ஏற்படுத்தி தர வேண்டும்,’’ என்றனர்.

Related Stories: