மருத்துவமனையில் உள்ள சகோதரனை பார்க்க அனுமதி மறுப்பு; கழுத்தறுத்து வாலிபர் தற்கொலை முயற்சி: கமிஷனர் அலுவலகம் முன் பரபரப்பு

சென்னை: சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம், 3வது நுழைவாயில் முன்பு நேற்று காலை கஞ்சா போதையில் வந்த வாலிபர், திடீரென யாரும் எதிர்பார்க்காதபோது, கையில் வைத்திருந்த பிளேடால் தனது கழுத்து, கை மற்றும் உடல் முழுவதும் அறுத்து கொண்டார். இதில் ரத்த வெள்ளத்தில் அந்த வாலிபர் துடித்தார். இதை பார்த்த போலீசார், அந்த வாலிபரை மீட்டு ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அதைதொடர்ந்து அவரிடம் விசாரித்தபோது, பெரும்பாக்கம் வள்ளுவர் நகர் 13வது ெதருவை சேர்ந்த ராஜ் (எ) ஹானஸ்ட் ராஜ் (29) என்றும், இவர் மீது மயிலாப்பூர், குரோம்பேட்டை காவல் நிலையத்தில் கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. மேலும், இவரது சகோதரர் ஜோதிபாஸ் முன்விரோதம் காரணமாக அரிவாள் வெட்டில் படுகாயமடைந்து,  ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரை பார்க்க ராஜ் சென்றபோது, அங்கு ராஜிக்கும் அவரது அண்ணன் மனைவி பிரியாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது,  கஞ்சா போதையில் இருந்த இவரை அங்குள்ள போலீசார் மருத்துவமனைக்குள் அனுமதிக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த ராஜ் தன்னை மருத்துவமனைக்குள் அனுமதிக்காக போலீசார் மீது நடவடிக்கை எடுக்க கோரி பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. இதையடுத்து வேப்பேரி போலீசார்  அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: