70 வயதை கடந்த மூத்த குடிமக்கள் சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு வந்த உடனே ஆவண பதிவு

* மென்பொருளில் மாற்றம் செய்த பதிவுத்துறை

* ஐஜி சிவன் அருள் உத்தரவு

சென்னை: சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு வரும் 70 வயதை கடந்த மூத்த குடிமக்கள் உடனே ஆவண பதிவு செய்யும் நடைமுறைக்காக மென்பொருளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று பதிவுத்துறை ஐஜி சிவன் அருள் தெரிவித்துள்ளார். இது குறித்து பதிவுத்துறை ஐஜி சிவன் அருள் அனைத்து சார்பதிவாளர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: மூத்த குடிமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு எழுதிக்கொடுப்பவர் அல்லது எழுதி வாங்குபவரில் யாரேனும் ஒருவர் எழுபது (70) வயதைக் கடந்தவராக இருக்கும் பட்சத்தில் அவர்கள் தங்களின் வரிசை எண்ணுக்காக காத்திருக்காமல் அலுவலகம் வந்தவுடன் உடனடியாக பதிவு செய்யும் முறை வரையறுத்துத் தரப்பட்டது.

இந்நிலையில், தற்போது மென்பொருளில் உரிய மாற்றங்கள் செய்யப்பட்டு, ஆவண விபரங்களை இணையதளத்தில் உள்ளீடு செய்து டோக்கன் பெறும் போதே ‘அடையாள வில்லை முன்பதிவு தேதியில் எந்த நேரத்திலும் ஆவணத்தை சமர்ப்பிக்கலாம்’ என்ற விபரம் ஆவணதாரருக்கு தெரிவிக்கும் வகையில் மென்பொருளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும், எழுபது வயது நிறைந்த மூத்த குடிமக்கள் பதிவு நாளன்று எந்த வரிசையில் டோக்கன் பதிவு செய்திருந்தாலும் அந்த டோக்கன்களை உடனடியாக பதிவு செய்யும் வண்ணம் மென்பொருள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

எனவே, மூத்த குடிமக்கள் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு வந்த பதிவு உடனேயே அவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து உடனடியாக ஆவணத்தை பதிவு செய்து அன்றன்றே திரும்பி வழங்கக்கூடிய ஆவணங்களை உடன் திரும்பி வழங்க அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: