ராயபுரம் மண்டலத்தில் உள்ள பொது கழிவறைகளில் பணம் வசூலித்த 6 பேர் மீது புகார்

சென்னை: சென்னை மாநகராட்சி, ராயபுரம் மண்டலத்தில் உள்ள பொது கழிப்பிடங்களில் பொதுமக்களிடம் கட்டணம் வசூலித்த 6 பேர் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி சார்பில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக 943 இடங்களில் 7,590 இருக்கை வசதிகள் கொண்ட பொது கழிப்பிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கழிப்பிடங்கள் பொதுமக்கள் கட்டணமில்லாமல் பயன்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறது.

மேலும், சென்னையில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், ரூ.36 கோடி மதிப்பில் 366 இடங்களில் சிதிலமடைந்த மற்றும் பயன்படுத்த உகந்த நிலையில் இல்லாத கழிப்பிடங்களை மறுசீரமைக்கவும், பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் புதிய பொதுக்கழிப்பிடங்களை அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த திட்ட பணியின் கீழ் மேற்குறிப்பிட்ட 366 இடங்களில் 860 இருக்கைகள் கொண்ட கழிப்பிடங்களும், 620 இருக்கைகள் கொண்ட சிறுநீர் கழிப்பிடங்களும் அமைக்கப்பட உள்ளன.

மாநகராட்சி சார்பில் அமைக்கப்படும் பொது கழிப்பிடங்களில் பொதுமக்களுக்கு எவ்வித கட்டணமுமின்றி சேவையாக வழங்கப்பட்டு வருகிறது. இதில் ஒரு சில இடங்களில் பொதுமக்களிடம் பணம் வசூலிப்பதாக புகார்கள் எழுந்தது. இந்நிலையில் மாநகராட்சி பொது கழிப்பிடங்களில் கட்டணமில்லா பொதுக்கழிப்பிடம் என பெயர் பலகைகளும் வைக்கப்பட்டுள்ளன. இதையும் மீறி பொதுமக்களிடம் கட்டணம் வசூலிக்கும் நபர்களின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.  

கடந்த மாதத்தில் மட்டும்  ராயபுரம் மண்டலத்தில் பொது கழிப்பிடங்களில் கட்டணம் வசூலித்த 6 நபர்கள் மீது  காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

 எனவே, மாநகராட்சி பொது கழிப்பிடங்களில் பொதுமக்களிடம் கட்டணம் வசூலித்தால் சம்பந்தப்பட்ட நபர்களின் மீது காவல்துறையில் புகார் பதியப்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

Related Stories: