கட்டிட கான்ட்ராக்டரை தாக்கிய வழக்கு: நடிகர் சந்தானம் நீதிமன்றத்தில் ஆஜர்

சென்னை: கட்டிட கான்ட்ராக்டரை தாக்கிய வழக்கில் நடிகர் சந்தானம் நீதிமன்றத்தில் நேற்று ஆஜரானார். சென்னை வளசரவாக்கம் சவுத்ரி நகரை சேர்ந்தவர் சண்முகசுந்தரம் (40). இவர், கட்டிடங்கள் கட்டி விற்பனை செய்யும் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இவரும் பிரபல நடிகர் சந்தானமும் குன்றத்தூரை அடுத்த கோவூர், மூன்றாம் கட்டளை பகுதியில் பெரிய அளவில் கட்டிடம் கட்டி விற்பனை செய்ய முடிவு செய்துள்ளனர். இதற்காக நடிகர் சந்தானம் பெரிய தொகையை சண்முக சுந்தரத்திடம் கொடுத்துள்ளார்.

ஆனால் சில காரணங்களால் அந்த கட்டிடம் கட்டும் திட்டத்தை இருவரும் சேர்ந்து கைவிட்டுள்ளனர். இதையடுத்து சந்தானம், தான் கொடுத்த பணத்தை சண்முக சுந்தரத்திடம் திருப்பிக்கேட்டுள்ளார். அதில் குறிப்பிட்ட தொகையை மட்டும் கொடுத்ததாகவும் மீதி தொகையை கொடுக்காமல் இழுத்தடித்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 2017 அக்டோபர் மாதம் சந்தானம் அவரது மானேஜர் ரமேஷ் இருவரும் வளசரவாக்கத்தில் உள்ள சண்முகசுந்தரத்தின் அலுவலகத்துக்கு நேரில் சென்று பணத்தை கேட்டுள்ளனர்.

இதில் இருவருக்குமிடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் ஒருவரை ஒருவர் மாறிமாறி தாக்கிக் கொண்டனர். இதில் சண்முகசுந்தரம் மற்றும் அங்கிருந்த அவரது வழக்கறிஞர் பிரேம் ஆனந்த் ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. சந்தானத்திற்கும் காயம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து வளசரவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இதுதொடர்பான வழக்கு பூந்தமல்லி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

வழக்கு விசாரணைக்காக நேற்று நடிகர் சந்தானம் நீதிமன்ற மாஜிஸ்திரேட் ஸ்டாலின் முன்னிலையில் ஆஜரானார். வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் வரும் 15ம் தேதி மீண்டும் வழக்கு விசாரணைக்காக சந்தானம் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார். இதையடுத்து சந்தானம் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

Related Stories: