கூட்டுறவுத்துறையில் அதிமுக ஆட்சியில் ரூ780 கோடி முறைகேடு: அமைச்சர் ஐ.பெரியசாமி குற்றச்சாட்டு

சின்னாளபட்டி: அதிமுக ஆட்சியில் தமிழக கூட்டுறவுத்துறையில் ரூ.780 கோடியளவில் முறைகேடு நடந்துள்ளதாக அமைச்சர் ஐ.பெரியசாமி குற்றம் சாட்டியுள்ளார். திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள சீவல்சரகு ஊராட்சி சுதனாகியபுரத்தில் அமைச்சர் ஐ.பெரியசாமி நேற்று அளித்த பேட்டியில், ‘‘தமிழக கூட்டுறவுத்துறையில் கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் தோராயமாக ரூ.780 கோடி முறைகேடு நடந்துள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்த சட்டக்குழுவும், மூத்த வக்கீல்கள் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் கூட்டுறவுத்துறை மோசடி குறித்து பல வழக்குகள் முறையாக விசாரணை நடத்தப்படவில்லை.

2 ஆண்டுகளில் குறைந்தபட்சம் ரூ.300 கோடி மோசடி  சொத்துக்களாவது பறிமுதல் செய்து, ஏலம் விடப்பட்டு, அரசு கஜானாவில் சேர்க்கப்படும். தவறு செய்தவர்கள் தப்பிக்க முடியாது. கூட்டுறவுத்துறையில் காலிப்பணியிடங்கள் வெளிப்படைத்தன்மையுடன் நிரப்பப்படும். தகுதியுள்ளவர்களுக்கு மட்டுமே பணி  வழங்கப்படும். கூட்டுறவுத்துறையில் தமிழகம் முன்னோடி மாநிலமாக உருவாகி  வருகிறது. இதற்கு காரணம் அர்ப்பணிப்போடும், சேவை மனப்பான்மையுடனும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் செயல்படுவதுதான்’’ என்றார்.

Related Stories: