அதிமுக கட்சியை உருவாக்கிய எம்.ஜி.ஆர் நோக்கத்திற்கு எதிராக ஓபிஎஸ் செயல்படுகிறார்: உச்ச நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

சென்னை: ஓ.பன்னீர்செல்வத்தின் செயல்பாடு என்பது அதிமுக கட்சியை உருவாக்கிய எம்.ஜி.ஆரின் நோக்கத்திற்கு எதிராக இருக்கிறது என உச்ச நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுவில் குற்றம் சாட்டியுள்ளார். கடந்த மாதம் நடந்த அதிமுக பொதுக்குழுவில் 23 தீர்மானங்களை தவிர வேறு எதனையும் நிறைவேற்றக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.

இதையடுத்து சுமார் 378 பக்கங்கள் கொண்ட அந்த மனுவில் கூறியிருப்பதாவது: உயர் நீதிமன்ற உத்தரவு அதிமுக கட்சியின் உள்விவகாரங்கள், ஜனநாயக அமைப்பு முறையிலும் தலையிடும் செயலாகும். மேலும் கட்சி தலைமை குறித்து விவாதிக்கக் கூடாது என்ற தற்போதுள்ள உத்தரவு எதிர்மனுதாரருக்கு ஒரு தனிப்பட்ட ”வீட்டோ” அதிகாரத்தை வழங்குவது போன்றும், அதேபோல் கட்சியின் அடிப்படை விதிகளை மீறி ஒரு நபருக்கு தனிப்பட்ட அதிகாரத்தை வழங்குவது போலும் உள்ளது. இது கட்சியின் ஜனநாயகத்தை சீர்குலைக்கும்.

எடப்பாடி பழனிசாமி ஆகிய நான் மாவட்ட செயலாளர்களுடன் நடத்திய ஆலோசனையில் பெரும்பான்மை ஆதரவு எனக்கு இருப்பது தெரியவந்துள்ளது. அதன் அடிப்படையில்தான் பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில் ஒற்றுமையாக தன்னை தேர்ந்தெடுக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் ஓ.பன்னீர்செல்வத்துக்கு அத்தகைய ஆதரவு இல்லாததால் அவர் கட்சி நடவடிக்கைகளுக்கு எதிராக செயல்படுகிறார். கட்சியின் முதன்மை மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களின் நம்பிக்கையை ஓ.பன்னீர்செல்வம் இழந்துவிட்டார்.

அதன் காரணமாகத்தான் ஒற்றைத் தலைமை குறித்த விவாதத்திற்கும் வர அவர் தயாராக இல்லை. இதுபோன்ற சூழலில் உயர் நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவால் ஏற்பட்ட பல்வேறு குழப்பங்களை நேரடியாக பொதுக்குழுவில் காண முடிந்தது. பெரும்பான்மை, பொதுக்குழு, செயற்குழுவின் முடிவுகளின் மதிப்பீடுகள், இவையெல்லாம் அதிமுகவின் அடிப்படையான விஷயமாகும். இத்தகைய மீறல்கள் என்பது அதிமுக என்ற கட்சியை உருவாக்கிய எம்.ஜி.ஆரின் நோக்கத்திற்கு எதிராக இருக்கிறது.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இதேபோன்று அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டு மனுவில் எங்களது உத்தரவை கேட்காமல் எந்த உத்தரவையும் பிறப்பிக்க வேண்டாம் என சண்முகம் தரப்பிலும் கேவியட் மனு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

டிவிட்டர் பக்கத்தில் பதவி மாற்றம்

எடப்பாடி பழனிசாமி தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் நேற்று திருத்தம் செய்துள்ளார். இதுவரை இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி என்று இருந்ததை மாற்றி, அதிமுக தலைமை நிலைய செயலாளர் என்று மாற்றம் செய்துள்ளார்.

Related Stories: