அறுவை சிகிச்சைக்கு பிறகு...

நன்றி குங்குமம் டாக்டர்

சென்ற இதழில் கண்புரை அறுவை சிகிச்சை முறைகள் குறித்து அறிந்து கொண்டோம். அவற்றில் என்னென்ன பிரச்னைகள் வரலாம், பிரச்னைகள் வராமல் எப்படி தடுப்பது என்பது குறித்து இப்போது பார்க்கலாம். அறுவை சிகிச்சைக்குப் பின் கண்ணில் வெள்ளை விழியில் சிலருக்கு சிவப்பு தோன்றலாம். பெரும்பாலும் அவை விரைவில் சரியாகிவிடும். கண்களில் பொருத்தப்படும் லென்ஸ் மற்றும் அதன் பிரஸர்வேட்டிவ் திரவத்தால் சிலருக்கு ஒவ்வாமை ஏற்பட வாய்ப்பிருக்கிறது. லேசான ஒவ்வாமையை மருந்துகளின் மூலமாக சரி செய்துவிடலாம். அதிகபட்ச ஒவ்வாமை ஏற்பட்டால் அரிதாக லென்ஸ் வெளியே எடுக்க வேண்டியது கூட வரலாம்.

லென்சை தாங்கிக் கொள்ளும் சிறு பை போன்ற அமைப்பு வயது மூப்பின் காரணமாக சிலருக்கு இயற்கையாகவே தளர்வானதாக இருக்கும். அப்படிப்பட்ட சூழலில் லென்ஸ் விலகி விட வாய்ப்புண்டு. இந்த பிரச்னை அறுவை சிகிச்சையின்போது கண்டறியப்பட்டால் விலக முடியாதபடி தயாரிக்கப்பட்ட சிறப்பு லென்ஸ்களை பொருத்துவார்கள். தையல் மூலமாக இத்தகைய லென்ஸ்களை விலகாமல் நிறுத்தி வைக்கலாம். அறுவை சிகிச்சைக்குப் பின் லென்ஸ் விலக நேர்ந்தால் மறு அறுவை சிகிச்சை மூலம் அதை அகற்ற வேண்டும். எல்லாப் பொருட்களுமே அதனதன் இடத்தில் இருந்தால்தான் நல்லது அல்லவா? லென்ஸ் விலகி விழிப்படிக நீர்மம் பகுதியில் விழ நேர்ந்தால் தீவிரமான எதிர்விளைவுகள் ஏற்படும். அந்தச் சூழலிலும் அறுவை சிகிச்சை கட்டாயம் தேவை.

அறுவை சிகிச்சைக்குப் பின் வரும் பிரச்னைகளில் கண் மருத்துவருக்கு சிம்மசொப்பனமாக அமைவது கண் தொற்று. தீவிரமான கிருமித் தொற்றினால் பார்வை இழப்பு கூட ஏற்படலாம். இன்றைய சூழலில் தேவையற்ற கிருமிநாசினி மருந்துகளை அதிகம் பயன்படுத்துவதால் உலகம் முழுவதிலுமே கிருமிகள் வீரியம் மிக்கதாக உருவாகின்றன. குறிப்பாக மருத்துவமனை வளாகத்தில் இருக்கும் கிருமிகள் அப்படிப் பட்டவையாக இருக்கின்றன. அதனால் கண் அறுவை சிகிச்சைக்குப் பின் கண் தொற்று ஏற்படாத வண்ணம் மிகக் கவனமாக இருக்க வேண்டும். அதனால்தான் அறுவை சிகிச்சைக்கு பயன்படும் ஊசிகள், சிரிஞ்சுகள்  போன்றவை தயாரிக்கப்படும்போதே மிக மிக கவனமாக சுத்திகரிக்கப் படுகின்றன. பின் அவை பல கட்ட பரிசோதனைக்குப் பிறகே விற்பனைக்கு வருகின்றன.

அதையும் மீறி சில சமயம் கிருமித் தொற்றுகள் ஏற்படலாம். தொற்றுக்கான அறிகுறிகளான வலி, கண் சிவப்பு, கண்களில் வீக்கம், நீர் வடிதல், பார்வைக்குறைபாடு(அறுவை சிகிச்சைக்கு பின் கிடைத்த தெளிவான பார்வை படிப்படியாக குறைய ஆரம்பிக்கும்) தோன்றியவுடன் விரைந்து சிகிச்சை அளித்தால் எந்தவிதப் பிரசனையுமின்றி கிருமித்தொற்றைக் குணப்படுத்த முடியும். சர்க்கரை நோயாளிகள் பலருக்கு சர்க்கரை ஆரம்பம் முதலே கட்டுக்குள் இல்லாமல் இருக்கும். கண்புரை அறுவை சிகிச்சை செய்வது என்று முடிவானவுடன் சிலர் தீவிர உணவுக்கட்டுப்பாடு, இன்சுலின், மாத்திரைகள் எல்லாவற்றையும் சரியாகக் கடைபிடித்து சர்க்கரையை கட்டுக்குள் கொண்டு வந்து விடுவார்கள்.

ஆனால், அறுவை சிகிச்சைக்குப் பின் எல்லாவற்றையும் காற்றில் பறக்க விட்டு மறுபடி சர்க்கரை அளவை அதிகரிக்கும்படி செய்துவிடுவார்கள். இந்த சூழலில் கிருமிகள் மிக எளிதாக தொற்றிக் கொள்கின்றன. எனவே, என்றைக்கும் சர்க்கரையைக் கட்டுக்குள் வைப்பது மிக மிக அவசியம். தையல் போட்டு செய்யப்படும் சிகிச்சைகளின் பிறகு 30 நாள், 45 நாள் என்று தலைக்குக் குளிப்பதைத் தவிர்க்கச் சொல்லியிருப்பார்கள். அறுவை சிகிச்சையின் போது திறக்கப்பட்ட பகுதி முழுவதும் மூடிக் கொள்ளும் முன் அழுக்குத் தண்ணீர், சிறு உரோமங்கள் உள்ளே சென்று கிருமித்தொற்று ஏற்பட்டு விடக்கூடாது என்பதே இந்த அறிவுரையின் அடிப்படை. இப்போதைய அறுவை சிகிச்சைகளின் பின் ஒரு வாரத்திலேயே தலைக்கு குளிக்கலாம்.

தலையில் எண்ணெய் வைக்கலாமா, முகம் கழுவலாமா, கடினமான உணவு வகைகளைச் சாப்பிடலாமா என்று பலவித கேள்விகள் அறுவை சிகிச்சை முடிந்தவுடன் நோயாளிகள் மனதில் எழுகின்றன. பாதுகாப்பான முறையில் எல்லாமே செய்யலாம் என்பதே இதற்கு பதில். சமீபத்தில் வந்த நோயாளி ஒருவர்... கண் அறுவை சிகிச்சை செய்து 20 நாட்கள் ஆகின்றன. சொட்டு மருந்தைப் போடுவதால் வெள்ளை நிறத்தில் திட்டுத் திட்டாக கண் இமை, கன்னம் என்று கசடுகள் படிந்திருந்தன. முகம் கழுவ கூடாது என்பதால் அப்படியே விட்டு விட்டதாகக் கூறினார். உண்மையில் இப்படிப்பட்ட செயல்களால் தொற்றும் ஒவ்வாமையும் அதிகரிக்கவே செய்யும்.

பல் சொத்தையும் கண்புரை அறுவை சிகிச்சைக்கு மிகப்பெரிய எதிரி. பல் துலக்குவதில் தயக்கம் காட்டுவது கிருமித்தொற்றினை வெற்றிலை பாக்கு வைத்து அழைப்பதற்குச் சமம். நன்றாக உணவை மென்று உண்ணுவதிலும் மக்களுக்குத் தயக்கம். கனமாக மென்று சாப்பிட்டால் லென்ஸ் உடைந்துவிடுமா விலகி விடுமா என்று பலர் கேட்பார்கள். நன்றாக மென்று உண்பது பற்களில் உள்ள கசடுகளை தங்க விடாமல் நீக்கி நன்மையையே புரியும். மாமிசம், மீன் போன்ற சத்துள்ள புரத மிக்க உணவுகள் உண்ணுவது உண்மையில் விரைந்து கண் அறுவை சிகிச்சை செய்த புண் ஆறுவதை ஊக்குவிக்கும். அறுவை சிகிச்சைக்குப் பின் அடுத்த ஒன்றரை மாதங்களுக்கு சொட்டு மருந்து போட வேண்டியதிருக்கும்.

சிலருக்குக் கூடுதலாக 15 நாட்களோ, ஒரு மாதமோ மருந்து தேவைப்படலாம். பலர் உச்சபட்ச பாதுகாப்பு உணர்வு காரணமாக அதே மருந்தை மருந்துக் கடைகளில் சென்று தாமாகவே வாங்கி மாதக்கணக்கில், ஆண்டுக்கணக்கில் எல்லாம் போடுவார்கள். இது மிக மிகத் தவறான செயல். கண்களின் இயற்கையாக இருக்கும் நல்ல கிருமிகள் அழிந்து விடுவதோடு ஸ்டீராய்டு மருந்தினால் கண் அழுத்த நோய் வருவதும் கண்களில் விழித்திரை பாதிப்பதும் அதிகரிக்கும்.

அறுவை சிகிச்சை முடிந்த சில நாட்களுக்குள் மன அழுத்தத்துக்கு ஆளாதல், மது அருந்துதல், வேறு ஏதேனும் அவசர அறுவை சிகிச்சைக்கு உட்படுதல் போன்ற காரணங்களால் கண்களின் விழித்திரையில் வீக்கம்(Cystoid macular edema) ஏற்படும். இந்த பிரசினை எளிதில் சரி செய்யக் கூடியதே. இந்த சமயங்களில் பார்வையில் ஏதாவது குறைபாடு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

அறுவை சிகிச்சை முடிந்து நீண்ட நாட்களுக்குப் பிறகு சிலருக்கு பார்வைக் குறைபாடு ஏற்படுவதுண்டு. லென்ஸின் பின்பகுதியில் வெள்ளை நிறத்தில் படலமாக(Posterior capsular opacity) கண்களில் லென்ஸ் நார்கள் புதிதாக வளர்ந்திருப்பதால் இந்த பிரச்னை ஏற்படலாம். லேசான படலம் என்றால் சொட்டு மருந்து மூலமாகவும் கனமான படலம் என்றால் எளிமையான லேசர் சிகிச்சை (YAG LASER) மூலமும் இதை சரி செய்துவிடலாம்.

(தரிசனம் தொடரும்)

Related Stories:

>