வாகனங்களின் டயர் தயாரிக்க புதிய விதிமுறை; மழையில பிரேக் அடிச்சாலும் வழுக்காம டக்குனு நிக்கணும்: ஒன்றிய அரசு கெடுபிடி உத்தரவு

புதுடெல்லி: வரும் அக்டோபர் மாதம் முதல் புதிய விதிமுறைகளின்படி தான் வாகனங்களின் டயர்களை தயாரிக்க வேண்டும் என்று ஒன்றிய அரசு  அறிவித்துள்ளது. இது குறித்து ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது: கனரக வாகன டயர்களை புதிய விதிமுறைகளின்படி தயாரிக்க வேண்டும். இந்தியாவில் விற்கப்படும் டயர்களின் உருளும் விதம், ஈரமான தரையில் உறுதியாக நிற்பது, சாலையில் பயணிக்கும் போது டயர்களில் இருந்து எழும் சத்தத்தை கட்டுப்படுத்தும் வரன்முறை ஆகியவை இந்த புதிய விதிமுறையில் இடம் பெறுகின்றன.

 இதே போன்ற விதிமுறைகள் கடந்த 2016ம் ஆண்டு முதல் ஐரோப்பிய நாடுகளின் சந்தைகளில் உள்ளன. இவை, டயரின் செயல்  திறன் மற்றும் பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளன. டயர் உற்பத்தியாளர்கள், கார்கள், பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்களுக்கான டயர்களை இறக்குமதி செய்பவர்கள் என அனைவரும் இந்த விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். டயர்கள் உருளும் விதம் எரிபொருள் திறனையும், ஈரமான  தரையில் நிற்கும் விதம் மழை காலத்தில் பிரேக் செயல்பாட்டையும், டயர் தரையில் படும்போது ஏற்படும் சத்தத்தை ஒலி உமிழ்வையும் குறிக்கும்.

சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் தனது வரைவு அறிவிப்பில், இந்த புதிய விதிமுறைகள் அனைத்தும் இந்தாண்டு அக்டோபர் முதல் தயாரிக்கப்படும் புதிய டயர்களுக்கும் பொருந்தும் என்று  தெரிவித்துள்ளது. பல உள்நாட்டு டயர் உற்பத்தியாளர்கள் தங்கள் தயாரிப்புகளை உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் விற்பனை செய்கின்றனர். எனவே, பாதுகாப்பு விதிமுறைகளை பூர்த்தி செய்வது ஒரு பிரச்னையாக இருக்கக் கூடாது என்று ஒன்றிய அரசு கருதுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: