சட்டப்பேரவை தீர்மானத்தை மீறி பல்கலைக் கழகத்துக்கு துணைவேந்தர் நியமனம்: மேற்கு வங்க ஆளுநர் அதிரடி

கொல்கத்தா: மேற்கு வங்க சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மீறி, ரபீந்திர பாரதி பல்கலைக் கழகத்துக்கு புதிய துணைவேந்தரை ஆளுநர் நியமித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜிக்கும், ஆளுநர் ஜெகதீப் தன்காருக்கும் பல்வேறு விஷயங்களில் மோதல் நிலவி வருகிறது. இதனால், ஆளுநரை மட்டம் தட்டும் வகையில், அவரிடம்  இருந்த பல்கலைக் கழக வேந்தர் பதவியை, சட்டப்பேரவையில் கடந்த மாதம் நிறைவேற்றிய சிறப்பு தீர்மானத்தின் மூலம் மம்தா பறித்தார். ஆளுநருக்கு பதிலாக அவரே இந்த தீர்மானத்தின் மூலம் வேந்தரானார்.

ஆனால், இந்த தீர்மானத்துக்கு இன்னும் ஒப்புதல் வழங்காமல் ஆளுநர் கிடப்பில் போட்டுள்ளார். இந்நிலையில், ரபீந்திர பாரதி பல்கலை கழகத்தின் துணை வேந்தரான சப்யாச்சி பாசு ராய்சவுத்திரி, விரைவில் ஓய்வு பெறுகிறார். இதையடுத்து, இதன் புதிய துணைவேந்தராக மகுவா முகர்ஜியை தன்கார் நேற்று அதிரடியாக நியமித்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவரின் இந்த செயலுக்கு திரிணாமுல் காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ‘ஆளுநரின் இந்த நடவடிக்கை, அவருடைய அதிகாரத்தை மீறிய செயல்,’ என்று கண்டித்துள்ளார்.

Related Stories: