ஒரு முறை மட்டும் பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை: மீறினால் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை

புதுடெல்லி: ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடை நாடு முழுவதும் நேற்று முதல் அமலானது. இத்தடையை மீறினால் 5 ஆண்டு சிறையும், அபராதமும் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டு உள்ளது. சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தக் கூடிய, ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் தெர்மோகோலின் உற்பத்தி, இறக்குமதி, இருப்பு வைத்தல், விநியோகித்தல், விற்பனை மற்றும் பயன்பாட்டுக்கு ஜூலை 1ம் தேதி முதல் தடை விதிக்கப்படும் என ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12ம் தேதி அறிவித்தது.

இதன்படி, நாடு முழுவதும் இந்த தடை உத்தரவு நேற்று முதல் அமலுக்கு வந்தது. இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஒருமுறை பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பொருட்கள், 2.4 லட்சம் டன்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. இதன் கழிவுகள் நிலத்தையும், நீர் வளங்களையும் கடுமையாக மாசுபடுத்துவதால் இத்தடையை தீவிரமாக அமல்படுத்த வேண்டும் என ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகம், மாநில அரசுகளுக்கு உத்தரவு பிறப்பித்தது. எனவே, தடை அமலான முதல் நாளே பல மாநிலங்களில் பிளாஸ்டிக் தடை குறித்த தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

தேசிய மற்றும் மாநில அளவிலான கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டு, விற்பனை, உற்பத்தியை கண்காணிக்க வருவாய், சுற்றுச்சூழல் துறை அதிகாரிகள் அடங்கிய சிறப்பு குழுக்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டன. மேலும், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் வேறு மாநிலத்திற்கு கொண்டு செல்லப்படுவதை தடுக்க அனைத்து மாநில அரசுகளும் தங்கள் எல்லையில் சோதனைச் சாவடி அமைத்து கண்காணிக்கவும் ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை சட்ட விரோதமாக தயாரித்தாலோ, விற்றாலோ, இருப்பு வைத்தாலோ, சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் பிரிவு 15ன்கீழ் 5 ஆண்டு சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.

இந்த தடையை அமல்படுத்துவதற்கு தாங்கள் இன்னும் தயாராகவில்லை என பெரும்பாலான பிளாஸ்டிக் உற்பத்தி நிறுவனங்கள் கவலை தெரிவித்துள்ளன. அதே நேரம், 9 மாத அவகாசத்துடன் போதுமான நேரம் தரப்பட்ட பிறகே இத்தடையை கொண்டு வந்திருப்பதாக ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்திர யாதவ் கூறி உள்ளார். இந்த தடையை அமல்படுத்தியதற்காக இந்தியாவுக்கு, டென்மார்க், நார்வே உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகள் பாராட்டு தெரிவித்துள்ளன.

கார்ப்பரேட் தயாரிப்புகளுக்கு பொருந்தாது

அதிகம் விற்பனையாகும் நுகர்வோர் பொருட்களுக்கு (எப்எம்சிஜி) மட்டும், இந்த தடையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஏனெனில், எப்எம்சிஜி துறையில் பேக்கேஜிங் செய்ய பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் ஏற்படுத்தும் மாசுக்கு உற்பத்தி நிறுவனமே கடைசிவரை பொறுப்பேற்க வேண்டும். உற்பத்தியாளரின் நீட்டித்த பொறுப்பு (இபிஆர்) எனப்படும் நெறிமுறையின் கீழ் உற்பத்தி நிறுவனமே பிளாஸ்டிக் தயாரிப்பிலிருந்து கழிவை அகற்றுவது வரையிலான பொறுப்புகளை ஏற்க வேண்டும் என்பதால், இந்த தடை கார்ப்பரேட் எப்எம்சிஜி பொருட்களுக்கு பொருந்தாது.

எந்த பொருட்களுக்கு தடை?

* பிளாஸ்டிக் குச்சிகளுடன்

கூடிய காது குடையும் பஞ்சு

* பலூன்களுக்கான பிளாஸ்டிக் குச்சி

* பிளாஸ்டிக் கொடிகள்

* ஐஸ்க்ரீம் குச்சிகள்

* அலங்கார தெர்மோகோல்

* பிளாஸ்டிக் தட்டு, டம்ளர், கத்தி, ஸ்பூன், ஃபோர்க்.

* ஸ்ட்ரா

* அழைப்பிதழ் அட்டைகள்

* சிகரெட் பாக்கெட்கள்

* 100 மைக்ரானுக்கும் குறைவான பிளாஸ்டிக் அல்லது பிவிசி பேனர்கள்

Related Stories: