ஓடிக்கொண்டிருந்த ஆட்டோவில் திடீர் தீ; ஊழியர்கள் தப்பினர்

பூந்தமல்லி: பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவ முகாம் நேற்று நடந்தது. இந்த முகாமில் கலந்து கொண்ட ஊழியர்கள் மருத்துவமனைக்கு சொந்தமான ஆட்டோவில் நேற்று வந்து கொண்டிருந்தனர்.  வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் நசரத்பேட்டை அருகே ஆட்டோ வந்தபோது ஆட்டோவின் முன்பகுதியில் இருந்து திடீரென புகை வந்துள்ளது.  இதை பார்த்த டிரைவர் ஆட்டோவை சாலை ஓரமாக நிறுத்தினார். ஆட்டோவில் வந்த மருத்துவமனை ஊழியர்களும் அதிலிருந்து இறங்கினர். அதற்குள் ஆட்டோவில் தீ மளமளவென பிடித்து எரிய ஆரம்பித்தது.

இதுகுறித்து பூந்தமல்லி தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அப்போது அந்த வழியாக ரோந்து வந்த போக்குவரத்து போலீஸ்காரர் சுதாகர் சாலையில் சென்ற கலவை கொண்டு செல்லும் லாரியை மடக்கி அதிலிருந்த தண்ணீரை பைப் மூலமாக ஆட்டோ மீது ஊற்றி தீயை அணைத்தார். அதற்குள் அங்கு வந்த தீயணைப்புத்துறையினரும் சேர்ந்து தீயை அணைத்தனர். அதற்குள் ஆட்டோ முழுவதும் எரிந்து சேதமானது. டிரைவர் உரிய நேரத்தில் ஆட்டோவை நிறுத்தியதால் ஊழியர்கள் தப்பினர். மின்கசிவு காரணமாக ஆட்டோவில் தீப்பிடித்ததா, அல்லது வேறு ஏதாவது காரணமா என்பது குறித்து நசரத்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: