ஆவடியில் கிடப்பில் போடப்பட்டுள்ளதால் குப்பை கொட்டும் இடமாக மாறிய மழைநீர் கால்வாய்; நடவடிக்கை எடுக்க மக்கள் வலியுறுத்தல்

ஆவடி: ஆவடி மாநகராட்சி பகுதியில் ரூ.11 கோடி செலவில் கட்டப்பட்ட மழைநீர் கால்வாய் கிடப்பில் போடப்பட்டுள்ளதால் தற்போது குப்பை கொட்டும் இடமாக மாறியுள்ளது. ஆவடி வாணியன் சத்திரம் சாலையில் பருவ மழையின்போது வெள்ளம் பெருக்கெடுத்து பாயும். இதனால் அங்குள்ள கோவில்பதாகை, பூம்பொழில் நகர், கலைஞர் நகர், கன்னடப்பாளையம் ஆகிய பகுதிகள் கடந்தாண்டு பலத்த மழையின் போது மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன. இதனால் ஆவடி - வாணியன்சத்திரம் சாலையில் மழை நீர் தேங்கி சாலை சேதம் அடைந்தது.

இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், மாநில நெடுஞ்சாலைத்துறை மூலம் மழைநீர் வடிகால் அமைக்க அரசு முடிவு செய்தது. அதற்காக, எச்.வி.எப்., எஸ்டேட் நுழைவு வாயில் முதல் கன்னடப்பாளையம் வரை 1.2 கி.மீ. தூரத்திற்கு 5.5 அடி ஆழம், 5 அடி அகலத்தில் இந்த சாலையின் இருபுறமும் ரூ.11 கோடி செலவில் புதிய கான்கிரீட் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி கடந்த மார்ச் மாதம் துவங்கியது. இந்த பணியை ஜூன் மாதத்திற்குள் முடிக்க மாநில நெடுஞ்சாலைத் துறை திட்டமிட்ட நிலையில், கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

இதனால், பொதுமக்கள் இரவில் வடிகாலில் விழுந்து விடும் அபாயம் உள்ளது.  மேலும் இந்த சாலையில் உள்ள கடைகளில் இருந்து கொட்டப்படும் குப்பை இந்த வடிகாலில் கொட்டப்படுவதால் மழை நீர் வடிகால் பிளாஸ்டிக் குப்பைகளால் தேங்கி நிரம்பி வருகிறது. இதுகுறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டபோது கால்வாய் இடையில் மின்கம்பம் வருவதால் கால்வாய் கட்டும் பணி தாமதம் ஏற்படுகிறது என்று கூறினர். எனவே, இந்த பிரச்னைக்கு உடனடி தீர்வு காணவேண்டும் என அப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: