பல்லவாடா ஊராட்சி அரசு பள்ளி வளாகத்தில் அகற்றப்படாமல் உள்ள கட்டிட இடிபாடுகள்; விஷ ஜந்துக்களால் மாணவர்கள் அச்சம்

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த பல்லவாடா ஊராட்சியில் 500க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் இருளர் காலனி, பல்லவாடா, பல்லவாடா காலனி, போந்தவாக்கம், உள்ளிட்ட பல்வேறு பகுதியிலிருந்து மாணவ, மாணவிகள் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை படித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த பள்ளியின் நடுவே மிகவும் பழுதடைந்த பள்ளி கட்டிடம் நீண்ட நாட்களாக இருந்தது. இதனை அகற்றி புதிய கட்டிடம் அமைக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.

அந்த கோரிக்கையை ஏற்று சில மாதங்களுக்கு முன்பு பழுதடைந்த பள்ளி கட்டிடம் பொக்லைன் இயந்திரம் மூலம் தரமட்டமாக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இடிக்கப்பட்ட பள்ளிக் கட்டிடம் கற்கள் ஆங்காங்கே குவியலாக உள்ளது. இதனால் அங்கு வரும் மாணவர்கள் விளையாட்டுத்தனமாக கற்களை கொண்டு விளையாடி வருகின்றனர்.

மேலும், நீண்ட நாட்களாக கற்களை எடுக்காததால் அங்கு விஷத்தன்மை கூடிய பாம்பு மற்றும் பூச்சிகள் நடமாடுகிறது. இதனை தெரியாமல் அங்கு விளையாடும் மாணவர்களை தீண்டும் அபாயம் உள்ளது. இதனை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக பள்ளி வளாகத்தில் உள்ள கற்களை அகற்றி வேண்டுமென பெற்றோர்கள் ஏற்கனவே மாவட்ட கலெக்டருக்கு புகார் கொடுத்ததாக கூறப்படுகிறது. எனவே, மாவட்ட கலெக்டர் நேரில் ஆய்வு செய்து இந்த கற்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: