கோயில் உண்டியல் உடைப்பு

திருத்தணி: திருத்தணி நகராட்சி, 7வது வார்டு சுப்ரமணியம் நகர், அம்மன் கோயில் தெருவில் துர்க்கையம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஆடி மாதம் ஜாத்திரை, ஐப்பசி மாதம் நவராத்திரி போன்ற விழாக்கள் வெகு விமர்ச்சையாக கொண்டாடப்படுகிறது. இதுதவிர தினமும் சுப்ரமணியம் நகர் பகுதி மக்கள் அம்மன் கோயிலுக்கு வந்து வழிப்படுவர். குறிப்பாக, செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை நாட்களில் நுாற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் விளக்குகள் வைத்தும், பொங்கல் வைத்தும் வழிப்படுவர்.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு கோயில் பூசாரி மோகன் வழக்கம்போல் கோவிலை பூட்டிக்கொண்டு வீட்டிற்கு சென்றார்.

நேற்று காலை 6:30 மணிக்கு வழக்கம்போல் பூசாரி கோயிலுக்கு பூஜை செய்வதற்கு வந்தபோது, கோயிலின் பூட்டை உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. உண்டியலில் ரூ.10 ஆயிரம் ரூபாய் இருக்கும் என கோயில் பூசாரி தெரிவித்தார். மேலும் பித்தளை வேல் மற்றும் விலை உயர்ந்த விளக்குகளையும் மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. தகவல் அறிந்ததும், திருத்தணி குற்றப்பிரிவு போலீசார் கைரேகை நிபுணர்களுடன் நேரில் வந்து அம்மன் கோவில் வளாகத்தில் ரேகைகளை பதிவு செய்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: