ஆவடி மாநகராட்சி பகுதியில் புதிய ரேஷன் கடை திறப்பு; அமைச்சர்கள் பங்கேற்பு

ஆவடி: ஆவடி மாநகராட்சி பகுதியில் புதிய ரேஷன் கடையை அமைச்சர்கள் திறந்து வைத்தனர். ஆவடி மாநகராட்சியில் பருத்திப்பட்டு பஜனை கோயில் தெரு மற்றும் அன்பு நகர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் ரேஷன் பொருட்களை பெறுவதற்கு வசதியாக புதிய ரேஷன் கடை அமைக்க வேண்டும் என அமைச்சர் சா.மு.நாசரிடம் கோரிக்கை வைத்திருந்தனர். இதையடுத்து தமிழக உணவு துறை அமைச்சர் சக்கரபாணி தலைமையில் நடந்த ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் சா.மு.நாசர் பருத்திப்பட்டு மற்றும் அன்பு நகர் பகுதியில் புதிய ரேஷன் கடை அமைக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

இந்நிலையில், இந்த பகுதியில் 2 ரேஷன் கடைகளாக பிரிக்கப்பட்டது. இதனை  பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் தலைமையில் உணவு துறை அமைச்சர் சக்கரபாணி நேற்று திறந்து வைத்தார். இதில் அன்பு நகர் பகுதியில் 883 குடும்ப அட்டை தாரர்கள் மற்றும் பஜனை கோயில் தெரு பகுதியில் 859 குடும்ப அட்டை தாரர்கள் என பிரிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து ரேஷன் கடையில் பொருட்கள் வாங்க வந்த பொதுமக்களிடம் அமைச்சர்கள் ரேஷன் பொருட்களை வழங்கினர். இந்நிகழ்ச்சியில் உணவு மற்றும் உணவு பொருள் வழங்குதல் ஆணையர் ராஜாராம், தமிழ்நாடு நுகர்பொருள் வணிக கழக மேலாண்மை இயக்குனர் பிரபாகரன், கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், ஆவடி மாநகராட்சி மேயர் ஜி.உதயகுமார், துணை மேயர் சூரியகுமார், ஆணையர் தர்ப்பகராஜ், அரசு உயர் அதிகாரிகள், ஆவடி மாநகராட்சி மண்டல குழு தலைவர்கள் மற்றும் கட்சி பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

Related Stories: