5ம் ஆண்டு கொண்டாட்டத்தில் சாதனை; ஜூன் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.44 லட்சம் கோடி.! கடந்தாண்டை விட 56% அதிகம்

புதுடெல்லி: கடந்த ஜூன் மாதம் ஜிஎஸ்டி மூலம் ரூ.1.44 லட்சம் கோடி வசூலாகி இருக்கிறது. இது, கடந்தாண்டை விட 56 சதவீதம் அதிகமாகும். சரக்கு மற்றும் சேவை வரியான ‘ஜிஎஸ்டி’, கடந்த 2017ம் ஆண்டு ஜூலை 1ம் தேதி நாடு முழுதும் அமல்படுத்தப்பட்டது. இதன் 5ம் ஆண்டு விழா ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் டெல்லியில் நேற்று நடந்தது.  இதில் பங்கேற்று பேசிய அவர், `ஜிஎஸ்டி வசூலில் கடந்த 2019ம் ஆண்டில் தொழில்நுட்பம் காரணமாக பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இதற்கு வரி செலுத்துவோர் ஜிஎஸ்டி அதிகாரிகளுடன் ஆலோசித்து தீர்வு காண வேண்டியிருந்தது.

ஒன்றிய மறைமுக வரிகள் மற்றும் சுங்கத்துறை, ஒன்றிய நேரடி வரிகள் ஆணையம் ஆகியவை விரைந்து செயல்பட்டதால், வரி செலுத்துவோருக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. வரி விதிப்பில் இனி குழப்பம் இருக்காது,’ என்று தெரிவித்தார்.  அவர் மேலும் கூறும் போது, ``கடந்த நிதியாண்டில் ஜூன் மாதம் ரூ.92,800 கோடி ஜிஎஸ்டி வசூலாகி இருந்தது. கடந்த மாதம் அதை காட்டிலும் 56 சதவீதம் உயர்ந்து ரூ.1.44 லட்சம் கோடி வரி வசூலாகி உள்ளது,’ என்று தெரிவித்தார். இதுவே, ஜிஎஸ்டி வரி அமல்படுத்தப்பட்ட பிறகு, பெறப்பட்ட 2வது அதிகபட்ச வரி வசூலாகும். கடந்த மே மாதம் ரூ.1.41 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூலானது.

Related Stories: