அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் பதவி இல்லை, இனி நான் தலைமை நிலைய செயலாளர் எடப்பாடி டுவிட்டர் பக்கம் மாற்றம்

சென்னை: அதிமுகவில் இணை ஒருங்கிணைப்பாளர் பதவியும் காலாவதியாகி உள்ளதால், இனி நான் அதிமுக தலைமை நிலைய செயலாளர் என்று எடப்பாடி தனது டுவிட்டர் பக்கத்தை மாற்றம் செய்துள்ளார்.

அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்னையால் இபிஎஸ் - ஓபிஎஸ் இடையே உச்சக்கட்ட மோதல் நடந்து வருகிறது. அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியாகி விட்டதாக எடப்பாடி அணியினர் அதிரடியாக அறிவித்தனர். இதன்மூலம் ஓ.பன்னீர்செல்வம், அதிமுகவின் பொருளாளராக மட்டுமே இனி செயல்படுவார் என்று அறிவித்தனர். இதேபோன்று, இணை ஒருங்கிணைப்பாளர் பதவியும் காலாவதியாகி விட்டதால் எடப்பாடி பழனிசாமி இனி அதிமுக தலைமை நிலைய செயலாளராக பதவி வகிப்பார் என்று கூறப்பட்டது.

இதை ஓபிஎஸ் தரப்பினர் ஏற்றுக்கொள்ளவில்லை. தற்போதும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்தான் என்று கூறி வருகிறார்கள். கடந்த 2 நாட்களுக்கு முன் கூட, எடப்பாடி பழனிசாமிக்கு ஓபிஎஸ் ஒரு கடிதம் எழுதினார். அதில், ‘ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்’ என்ற அடைமொழியுடன் கையெழுத்திட்டு அனுப்பி இருந்தார். மேலும், நீதிமன்றம் மற்றும் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்துக்கும் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதி இருந்தார். அதில், ‘அதிமுகவில் எந்த முக்கிய முடிவு எடுப்பதாக இருந்தாலும் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் தான் எடுக்க முடியும். பொதுக்குழு உள்ளிட்ட கூட்டங்களை நடத்துவது என்றாலும் இருவரும் கையெழுத்திட வேண்டும். அதனால் ஒருங்கிணைப்பாளர்களின் பதவி காலாவதியாகவில்லை. 5 ஆண்டுகள் நீடிக்கும்’ என்று கூறி உள்ளார்.

ஆனால், எடப்பாடி அணியினர், ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதி ஆகியுள்ளதை உறுதிபடுத்தி வருகிறார்கள். எடப்பாடி பழனிசாமி, கடந்த சில நாட்களுக்கு முன் தலைமை கழக நிர்வாகிகள் கூட்டத்தை கூட்ட அழைப்பு விடுத்தபோதும், தன்னை அதிமுக தலைமை நிலைய செயலாளர் என்றே குறிப்பிட்டு வந்தார். இணை ஒருங்கிணைப்பாளர் என்று குறிப்பிடவில்லை. நேற்று ஓ.பன்னீர்செல்வத்துக்கு எடப்பாடி ஒரு கடிதம் எழுதினார். அதில், தலைமை நிலைய செயலாளர் என்றுதான் கூறி இருந்தார். இந்த பரபரப்பான சூழ்நிலையில் எடப்பாடி பழனிசாமி, தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் இன்று திருத்தம் செய்துள்ளார். அதன்படி, இதுவரை இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி என்று இருந்ததை, அதிமுக தலைமை நிலைய செயலாளர் என மாற்றம் செய்துள்ளார். இந்த நடவடிக்கையால் ஓபிஎஸ் தரப்பினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Related Stories: