ஆட்டோவில் தவறவிட்ட ரூ. 1.50 லட்சம் ஒப்படைப்பு; டிரைவருக்கு பாராட்டு

துரைப்பாக்கம்: சேலம் மாவட்டம், வசந்தம் நகரை சேர்ந்தவர் செல்வகுமார் (36). இவர், சேலத்தில் ஒரு தனியார் கிரானைட் நிறுவனத்தில் அக்கவுன்டன்ட்டாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி நித்யாபாண்டி (32). சென்னை நீலாங்கரையில் ஒரு தனியார் மையத்தில் பிளம்பிங் வேலைக்கான பயிற்சி வகுப்பில் செல்வகுமார் சேர்ந்திருக்கிறார். இதற்கான பயிற்சி கட்டணமாக ரூ. 1.50 லட்சத்தை எடுத்துக் கொண்டு, கடந்த 27ம் தேதி செல்வகுமாரும் நித்யாவும் சென்னை வந்தனர். பின்னர் திருவான்மியூரில் ஒரு ஓட்டலில் இருவரும் தங்கி, நேற்று நீலாங்கரையில் உள்ள தனியார் மையத்துக்கு ஷேர் ஆட்டோவில் சென்றுள்ளனர்.

அங்கு கீழே இறங்கியபோது செல்போன் மற்றும் பணம் வைத்திருந்த பையை ஆட்டோவிலேயே தவற விட்டுவிட்டு இருவரும் சென்றுவிட்டனர். பயிற்சி மையத்தில் பணத்தை தேடியபோது, அது ஷேர் ஆட்டோவிலேயே தவறவிட்டது தெரியவந்தது. இதுகுறித்து நீலாங்கரை போலீசில் நித்யாபாண்டி புகார் அளித்தார். ஆட்டோவில் தவறவிட்ட பையில் இருந்த செல்போன் எண்ணில் போலீசார் தொடர்பு கொண்டனர். அதை எடுத்து பேசிய ஈஞ்சம்பாக்கம் குப்பத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ராஜசேகர் (32) என்பவரிடம் தகவல் தெரிவித்தனர்.

அதன்பிறகு ஆட்டோவை ராஜசேகர் சோதனை செய்தபோது, அதில் ரூ. 1.50 லட்சம், செல்போனுடன் பை இருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அந்த பையை நீலாங்கரை காவல் நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தார். அவருக்கு செல்வகுமார் தம்பதியும் போலீசாரும் பாராட்டு தெரிவித்தனர்.

Related Stories: