பயிர் காப்பீட்டு தொகை வழங்காததை கண்டித்து திருவேங்கடத்தில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்

திருவேங்கடம்: திருவேங்கடம், சங்கரன்கோவில் தாலுகாகளில் மானாவாரி நிலங்கள் அதிகமாக உள்ளது. இப்பகுதி விவசாயிகள் 2020, 2021ம் ஆண்டில் மக்காச்சோளம், உளுந்து, பாசிப்பயிர், பருத்தி மற்றும் சிறுதானிய பயிர்கள் சாகுபடி செய்திருந்தனர். அறுவடைக்கு தயாரான நிலையில் தொடர் மலையால் பயிர்கள் நாசமானது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தமிழக அரசு இடைக்கால நிவாரணமாக ஏக்கருக்கு ரூ.4ஆயிரம் வழங்கியது. ஆனால் இன்சூரன்ஸ் நிறுவனம் இன்னும் காப்பீட்டுத் தொகை வழங்கவில்லை.

இதை கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் 500க்கும் மேற்பட்டவர்கள் திருவேங்கடம் தாலுகா அலுவலகத்தின் முன்பாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். விவசாய சங்க பிரதிநிதிகளை திருவேங்கடம் தாலுகா அலுவலகத்தில் தென்காசி கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) பாலசுப்பிரமணியன், வேளாண்மை துறை இணை இயக்குனர் தமிழ்மலர், திருவேங்கடம் தாசில்தார் ரவீந்திரன், டிஎஸ்பி சுப்பையா, இன்ஸ்பெக்டர் சக்திவேல் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில் வருகிற 6ம்தேதி திருவேங்கடம் தாசில்தார் அலுவலகத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள், பயிர் காப்பீட்டு நிறுவன மேலாளர், புள்ளியல் துறையினர், வருவாய் துறையினர், காவல்துறையினர் ஆகியோரை நேரில் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என்று உறுதி அளித்தனர். இதனால் போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். பேச்சுவார்த்தையில் தமிழ் விவசாயிகள் சங்க மாநில தலைவர் நாராயணசாமி, துணைத்தலைவர் நம்பிராஜன், தென்மண்டல ஒருங்கிணைப்பாளர் சுப்பாராவ், வக்கீல்கள் சீனிவாசன், ராகவன் மற்றும் 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.

Related Stories: