காட்பாடியில் சீரமைப்பு பணி முடிந்தது ரயில்வே மேம்பாலத்தில் போக்குவரத்து தொடக்கம்

வேலூர்: காட்பாடி ரயில்வே மேம்பாலத்தில் சீரமைக்கும் பணிகள் முடியவடைந்தையடுத்து இன்று காலை முதல்  இருசக்கர வாகன போக்குவரத்து தொடங்கியது. தேசிய நெடுஞ்சாலை உட்கோட்டத்திற்குட்பட்ட மங்களூர்- விழுப்புரம் சாலையில் உள்ள காட்பாடி ரயில்வே மேம்பாலம் ஓடுதளத்தின் இணைப்புகள் வலுவிழந்துள்ளது. இதை ரூ. 2 கோடி செலவில் சீரமைக்க ரயில்வே நிர்வாகம் மற்றும் தேசிய நெடுஞ்சாலை துறை நடவடிக்கை எடுத்தது.

இதற்காக கடந்த ஏப்ரல் 1ம் தேதி போக்குவரத்து மாற்ற முடிவு செய்யப்பட்டது. ஆனால் பள்ளி மாணவர்களின் தேர்வு மற்றும் நிர்வாக காரணங்களுக்காக இப்பணி தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. ஆனால் பாலம் மிகவும் பழுதடைந்துள்ளதால் உடனடியாக பணி தொடங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி போக்குவரத்து கடந்த ஜூன் 1ம் தேதி முதல் மாற்றப்பட்டு காட்பாடி ரயில்வே மேம்பாலம் சீரமைப்பு பணி தொடங்கியது.

போக்குவரத்து மாற்றியமைக்கப்பட்டதால் பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். இப்பணியை விரைந்து சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதையடுத்து, மேம்பாலத்தின் ஒவ்வொரு இணைப்பிலும் 2 பிளேட்டுகள் என மொத்தம் 8 பிளேட்டுகள் அமைத்து, புதிய தார் சாலை அமைக்கும் பணிகள் கடந்த சில நாட்களாக நடந்து வந்தது.

இப்பணிகள் முடிந்து மேம்பாலத்தின் உறுதித்தன்மையை உறுதிப்படுத்த நேற்று 120 டன் எடை கொண்ட லாரியை இயக்கி ஆய்வு செய்யப்பட்டது. இதைதொடர்ந்து, நேற்று மாலை கலெக்டர் குமாரவேல்பாண்டியன் ஆய்வு செய்தார். பின்னர், இன்று முதல் பைக் போக்குவரத்தும், 4ம் தேதி முதல் 4 சக்கர வாகனங்கள் இயக்க அனுமதி வழங்கப்படும் என தெரிவித்தார். அதன்படி இன்று காலை முதல் காட்பாடி ரயில்வே மேம்பாலத்தின் வழியாக இருசக்கர வாகன போக்குவரத்து தொடங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Related Stories: