சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு; அமலாக்கத்துறை முன் சிவசேனா எம்பி ஆஜர்

மும்பை: மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான கூட்டணி அரசு கவிழ்ந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் சிவசேனா கட்சியின் தலைமை செய்தி தொடர்பாளர் சஞ்சய் ராவத் எதிராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. மும்பை கோரேகாவ் பகுதியில் பத்ரா குடிசை சீரமைப்பு பணியில் ஈடுபட்ட  நிறுவனம் ரூ.1,039 கோடி முறைகேட்டில் ஈடுபட்டதாகவும், அதில், ரூ.100 கோடியை  பிரவின் ராவத் என்பவர் சஞ்சய் ராவத் குடும்பத்தினர் உள்ளிட்ட பலரின் வங்கி  கணக்கிற்கு அனுப்பியதாகவும் கூறப்படுகிறது.

 இது தொடர்பான சட்டவிரோத  பணப்பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. அதன்படி சஞ்சய் ராவத்தின் வக்கீல், மும்பை பல்லர்டு எஸ்டேட்டில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு கடந்த சில தினங்களுக்கு முன் சென்றார். அப்போது, அலிபாக்கில் கட்சி பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள ஏற்கனவே முடிவு செய்ததால் சஞ்சய் ராவத்தால் ஆஜராக முடியவில்லை என்றும், முக்கிய ஆவணங்களை சேகரித்து விசாரணைக்கு ஆஜராகும் வகையில் அவருக்கு 14 நாட்கள் அவகாசம் வழங்க வேண்டும் எனவும் வக்கீல் கோரிக்கை விடுத்தார்.

ஆனால் சஞ்சய் ராவத்திற்கு 14 நாட்கள் அவகாசம் வழங்க அமலாக்கத்துறை மறுத்துவிட்டது. ஜூலை 1ம் தேதி (இன்று) ஆஜராகும்படி அவருக்கு புதிய சம்மன் அனுப்பி உத்தரவிட்டது. அதன்படி இன்று மும்பை அமலாக்கத்துறை அலுவலகத்தில் சஞ்சய் ராவத் ஆஜரானார். அதனால் அமலாக்கத்துறை அலுவலக பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தொடர்ந்து இன்று மாலை அவரை சஞ்சய் ராவத்திடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது.

Related Stories: