மணிப்பூர் நிலச்சரிவு சம்பவம், 7 வீரர்கள் உட்பட 14 பேரின் சடலம் மீட்பு; மேலும் 60 பேரின் கதி என்ன?

இம்பால்: மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 7 வீரர்கள் உட்பட 14 பேரின் சடலங்கள் மீட்கப்பட்ட நிலையில் மேலும் 60 பேரின் கதி என்ன? என்பது தெரியவில்லை. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மணிப்பூர் மாநிலம் நோனே மாவட்டம் துபுல் ரயில் நிலையம் அருகே கட்டுமானப் பணி நடைபெறுவதால் அப்பகுதியில் பாதுகாப்புப் பணிக்காக, 107 டெரிடோரியல் ஆர்மி முகாம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அப்பகுதியில் கன மழை பெய்ததால் நேற்று முன்தினம் இரவு நிலச்சரிவு ஏற்பட்டது. துபுல் ரயில் நிலையம் அருகே ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உள்ளவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடக்கிறது.

இதுவரை 23 பேர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், 7 வீரர்கள் உட்பட 14 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. ராணுவம், அசாம் ரைபிள்ஸ் குழுவினர் முழு வீச்சில் மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பலர் உயிருடன் புதைந்துள்ளதால் உயிரிழப்புகள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. மணிப்பூர் நிலச்சரிவு சம்பவம் குறித்து பிரதமர் மோடி வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும், முதல் மந்திரி பிரேன் சிங்கிடம் தொடர்பு கொண்டு மீட்புப் பணிகளுக்கு ஒன்றிய அரசு அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார்.

சம்பவம் குறித்து போலீஸ் டிஜிபி பி டவுங்கல் கூறுகையில், ‘இடிபாடுகளில் சிக்கியிருந்த 23 பேர் மீட்கப்பட்டனர்; 14 பேர் உயிரிழந்தனர். எத்தனை பேர் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தனர் என்பது உறுதி செய்யப்படவில்லை. கிராம மக்கள், ராணுவம், ரயில்வே ஊழியர்கள், தொழிலாளர்கள் உட்பட 60 பேர் நிலச்சரிவில் சிக்கியிருக்க வாய்ப்புள்ளது’ என்று கூறினார்.

Related Stories: