முழு மாத சம்பளம் கேட்டு தகராறு நடிகர், நடிகை, மகளுக்கு மிரட்டல் சமையல்காரர் அதிரடி கைது

மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் வசித்து வரும் தொலைகாட்சி நடிகர் மஹி விஜ், நடிகை ஜெய் பானுஷாலி ஆகியோருக்கு இரண்டு வயதில் தாரா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் தம்பதிகளின் வீட்டில் சமையல்காரராக இருக்கும் நபர், வீட்டில் உள்ள சில பொருட்களை திருடிவிட்டதாக கூறப்படுகிறது. இதையறிந்த ஜெய் பானுஷாலி, சமையல்காரரை பணியில் இருந்து நீக்க வேண்டும் என்று தனது கணவர் மஹி விஜியிடம் கூறியுள்ளார். அதையடுத்து சமையல்காரரை அழைத்து, ‘இனிமேல் எங்கள் வீட்டிற்கு வேலைக்கு வரவேண்டாம்’ என்று அவரிடம் மஹி விஜ் கூறியுள்ளார்.

ஆனால் அந்த சமையல்காரர், ‘வேலைக்கு சேர்ந்து மூன்று நாட்கள்தான் ஆகிறது. எனவே, எனக்கு முழு மாத சம்பளத்தையும் கொடுத்தால்தான் செல்வேன்’ என்று கூறினார். அதிர்ச்சியடைந்த தம்பதியினர், சமையல்காரரிடம் வாக்குவாதம் செய்தனர். பின்னர் அந்த சமையல்காரர், ‘எனக்கு முழு மாத சம்பளத்தையும் கொடுக்கவில்லை என்றால், உங்கள் வீட்டின் முன் 200 பேர் வந்து தகராறு செய்வார்கள்’ என்று கூறிவிட்டு சென்றார். பின்னர் மது குடித்துவிட்டு போதையில் வந்து தகராறு செய்த சமையல்காரர், ‘எனது சம்பளத்தை கொடுக்கவில்லை என்றால், கத்தியால் குத்தி மூவரையும் கொல்வேன்’ என்று மிரட்டல் விடுத்துள்ளார்.

அதையடுத்து ஜெய் பானுஷாலி, தனது சமூக வலைதள பக்கத்தில் சமையல்காரரால் தனக்கும், கணவருக்கும், மகளுக்கும் கொலை மிரட்டல் வருவதாக பதிவிட்டிருந்தார். பின்னர் தம்பதியர் இருவரும் மும்பை போலீசில் புகார் அளித்தனர். அவர்கள் சமையல்காரரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: