சொத்தைப்பல்லுக்கு என்ன சிகிச்சை?!

நன்றி குங்குமம் டாக்டர்

பற்கள் உள்ள பலரையும் பாடாய்ப்படுத்தும் ஒரு பிரச்னை பல் சொத்தை என்று சொல்லலாம். பற்களின் நிறம் மாறுவது, உணவு உண்ணும்போது ஏற்படும் சிரமம், சாப்பிட்ட பின்பு பற்கள் இடுக்கில் உணவுத்துகள் சிக்கிக் கொள்வது, வாய் துர்நாற்றம் போன்ற பல பின்விளைவுகளை பல் சொத்தை உண்டாக்கிவிடும். இந்த பல் சொத்தையை எப்படி தடுப்பது, என்னென்ன சிகிச்சைகள் இருக்கின்றன என்பது உள்பட பற்களின் நலம் காக்கும் சில கேள்விகளை பல் சிகிச்சை மருத்துவர் ராஜேஷ் முருகன் முன்பு வைத்தோம்...

சொத்தை பல் என்பது என்ன?!

நாம் உட்கொள்ளும் உணவானது பல்லின் நடுவில் டெண்டின் பகுதியில் சிக்கிக் கொண்டு, பல நாட்களாக கவனிக்காமல் இருந்தால் பாக்டீரியாக்கள் உருவாகிறது. இதையே பல் சொத்தை என்கிறோம்.

சொத்தைப்பல் வந்தால் வலி ஏற்படுவது எதனால்?

பல் என்பது Enamel, Dentin, Pulp என்று மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்படுகிறது. இவற்றில் பல்லின் நடுப்பகுதிக்கு பெயர்தான் Dentin. பல்லை ஒட்டி உள்ள எனாமல் பகுதியை பாக்டீரியா துளைக்கும்போது, பல்லுக்கு வலி தெரியாது. அதுவே டெண்டின் உள்ள பகுதியை துளைக்கும்போது வலி தெரியும்.

 

சொத்தை பற்களுக்கான அறிகுறிகள் என்ன?

பல்லில் உணவுத்துகள் மாட்டிக் கொள்வது அல்லது பல்கூச்சம் ஏற்படுவது இதன் முதல் அறிகுறி. இரண்டாவது அறிகுறி துர்நாற்றம் வீசுவது. பல்லில் உணவுத்துகள் மாட்டும்போதே பல் மருத்துவரை சந்தித்து பரிசோதிக்க வேண்டும். 6 மாதத்திற்கு ஒருமுறை மருத்துவரை அணுகி பல் பரிசோதனை செய்வதால் சொத்தை பல்லுக்கான அறிகுறிகளை கண்டுபிடித்து ஆரம்ப நிலையிலேயே சரிசெய்துவிடலாம். இதற்கு Preventive treatment என்று பெயர்.

சொத்தை பற்கள் ஏற்பட காரணம் என்ன?

சொத்தை பற்கள் ஏற்பட பல காரணங்கள் இருந்தாலும் பல் சுத்தமின்மைதான் முதல் காரணமாக இருக்கிறது. காலையில் பல் துலக்குவது போல இரவும் தூங்கப்போகும்போதும் பல் துலக்குவது முக்கியம். பல் சுத்தமாக இல்லாமல் இருந்தால் கண்டிப்பாக சொத்தைப்பல் வரும். தாத்தா, பாட்டி, அப்பா, அம்மாவிற்கு சொத்தை பல் இருந்தால் மரபணுரீதியாகப் பிள்ளைகளுக்கும் வர வாய்ப்பிருக்கிறது. சர்க்கரை நோய், இதய நோய் போன்ற உடல்ரீதியான பிரச்னை இருந்தாலும் சொத்தை பல் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது. பதப்படுத்தப்பட்ட, டின்களில் அடைத்து விற்கப்படும் ரசாயனக் கலப்படம் உள்ள இனிப்புகள், பழச்சாறுகள் உண்பதும் சொத்தை பல் உருவாக காரணமாகிறது.

சொத்தை பல் வராமல் இருக்க வழி என்ன?

காலை, இரவு என இரண்டு வேளையிலும் பல் துலக்க வேண்டும். எந்த உணவுப்பொருள் சாப்பிட்டாலும் வாய் கொப்பளிப்பது அவசியம். காபி, டீ குடித்தாலும் கூட வாய் கொப்பளிக்க வேண்டும். சிலருக்கு உணவு சாப்பிட்ட பிறகு, இனிப்பு சாப்பிடுவது பழக்கமாக இருக்கும். இதுபோல் இனிப்பு சாப்பிட்ட பிறகு தண்ணீரால் வாயை நன்கு கொப்பளிக்க வேண்டும். சாப்பிட்ட பிறகு மவுத் வாஷ் கூட பயன்படுத்தலாம்.

வேறு ஏதேனும் ஆலோசனைகள்?

பொதுவாக அவ்வப்போது வாயை தண்ணீரில் கொப்பளிப்பதால், பாக்டீரியா உற்பத்தியாவதைத் தடுக்கலாம். நமக்கு சொத்தைப் பல் இல்லை என்றாலும் கூட, 6 மாதத்திற்கு ஒரு முறை மருத்துவரை சந்தித்து பற்களைப் பரிசோதனை செய்துகொள்வது நல்லது. இதன் மூலம் சொத்தைப்பல் உள்பட வேறு ஏதேனும் பிரச்னைகள் இருந்தாலும் முன்கூட்டியே உணர்ந்து தவிர்க்க முடியும்.

குழந்தைகளுக்கு எத்தனை வயதுக்குள் பல் தேய்க்க கற்றுக்கொடுக்க வேண்டும்?

குறைந்தது 2 வயதில் ப்ரஷ் பண்ண குழந்தைகளுக்கு கற்று கொடுத்திருக்க வேண்டும். 3 அல்லது 3 1/2 வயதுக்குள் குழந்தைகளே தனியாக ப்ரஷ் பண்ண ஆரம்பித்திருக்க வேண்டியது அவசியமாகும். பற்களின் ஆரோக்கியம் பற்றிய புரிதலையும் குழந்தைப்பருவத்திலேயே ஏற்படுத்த வேண்டும்.

பல் தேய்க்கும் சரியான முறை எது?

2 அல்லது 3 நிமிடத்துக்கு மேலோ அல்லது குறைவாகவோ பல் துலக்கும் நேரம் இருக்கக் கூடாது. ப்ரஷ்ஷினைத் தேய்க்கும்போது மிகுந்த அழுத்தம் கொடுக்கக் கூடாது. இல்லாவிட்டால் பல்லின் எனாமல் பகுதியில் தேய்மானம் ஏற்படும். நீண்ட நாள் இதேமுறையில் பல் துலக்கினால் எனாமல் கரைந்து பல்லில்  பள்ளம் ஏற்படக் கூட வாய்ப்பிருக்கிறது. மனதை எங்கோ அலைபாய வைத்துக் கொண்டு, நீண்ட நேரம் சிலர் பல் தேய்ப்பார்கள். இது தவறு. மேல் பல், கீழ் பல் சேர்த்த மாதிரி கடித்துக்கொண்டு வட்டமாக(Anti clockwise) பல் தேய்க்க வேண்டும். அவ்வாறு செய்வதால் கையின் அழுத்தம்(Arm force) பல்லுக்கு போகாது.

ப்ரஷ் பயன்படுத்துவது அவசியமா?

இன்று நாம் உட்கொள்ளும் உணவுகள் அனைத்தும் பாக்கெட்டுகளில் பாதுகாக்கப்பட்ட, பதப்படுத்தப்பட்ட உணவுகளாக உள்ளது. எனவே, ப்ரஷ் பயன்படுத்துவதே சரியான வழி. விரலால் பல் துலக்கும்போது பல்லிடுக்கில் இருக்கும் உணவுப்பொருள் அகற்றப்படாது. ப்ரஷ் பயன்படுத்துவதால் பல்லின் இடுக்கில், மூலையில் புதைந்த உணவுப் பொருட்கள்கூட வெளியே வந்துவிடும். இப்படி ப்ரஷ் பயன்படுத்துவதால் ஈறில் சீரான ரத்த ஓட்டமும் நடைபெறும். பல் துலக்கிய பிறகு, கடைசியாக வேண்டுமானால் விரலால் ஒருமுறை தேய்த்துக் கொள்ளலாம். இதுபோல் விரலால் தேய்க்கும்போது கீச், கீச் என்ற ஒலி ஏற்படும்போது பற்கள் சுத்தமானதை உறுதி செய்து கொள்ளலாம். கர்ப்ப காலத்தில் சொத்தைப் பல் ஏற்பட்டால், அதனால் பிறக்கும்

குழந்தைக்கு பாதிப்பு ஏற்படுமா?

கர்ப்ப காலத்தில் சொத்தை பல் வருவது மிகவும் குறைவு. அப்படியே வந்தாலும் அது குழந்தையிடம் ஏற்படாது. மரபு வழியாக இதய நோயாளி, சர்க்கரை நோயாளிகளுக்கு இதுபோன்ற சொத்தைப்பல் வர வாய்ப்பிருக்கிறது. சிலர் சூயிங்கம் மெல்கின்றனர்.

இது பற்களின் ஆரோக்கியத்துக்கு பாதகமானதில்லையா?

சூயிங்கம் பயன்பாடு ஆபத்து என்று சொல்ல முடியாது. சொத்தை பல் அதிகம் வராமல் தடுக்க சுகர் ஃப்ரீ சூயிங்கம் பயன்படுத்தலாம் என்றுகூட சில ஆய்வுகள் கூறுகின்றன. எனவே, ஒரு நாளைக்கு 2 சூயிங்கம் வரை பயன்படுத்தலாம். இரண்டுக்கும் மேல் சூயிங்கம் பயன்படுத்துவதுதான் தவறு. அதிகமான சூயிங்கம் மெல்லும்போது மேல் தாடை மற்றும் கீழ் தாடையில் உள்ள எலும்பில் கால்சியம் குறைபாடு ஏற்பட வாய்ப்பு உண்டு. இது பல் ஆடக் கூட காரணமாகும்.

சரியான பிரஷ்சினைத் தேர்ந்தெடுப்பது எப்படி?

பிரஷ்சினை பிராண்ட் பார்த்து மட்டுமே வாங்கக் கூடாது. டூத் பிரஷ் அட்டையின் மேல் Soft, Hard, Medium, Extra soft, Extra hard என பிரஷ்கள் 5 வகையாக அச்சிடப்பட்டிருக்கும். பற்களில் எந்த பாதிப்பும் இல்லாதவர்கள் Soft brush பயன்படுத்தலாம். வெற்றிலை பாக்கு, புகை பிடிப்பவர்கள், சொத்தை பல், பல் கூச்சம் போன்ற பிரச்னை உள்ளவர்கள் Extra soft brush பயன்படுத்தலாம். Extra soft brush மிகவும் வளைந்து கொடுப்பதால் முதியவர்களுக்கு மிகவும் நல்லது என்று சொல்லலாம்.  

சொத்தை பல் வந்தால் உடலின் வேறு பாகங்களும் பாதிக்கப்படுமா?

பல்லுக்கும் இதயத்துக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. எனவே, இதய நோயாளிகளாக இருந்தால் சொத்தை பல்லில் உள்ள பாக்டீரியா இதயத்தை பாதிக்கும் வாய்ப்பு உண்டு. அதேபோல் ஈறினைச் சுற்றியுள்ள சதையில் வீக்கம், புண் இருந்தால் சர்க்கரை நோய் பாதிப்பாகக் கூட இருக்கலாம். இதற்கு Underline infection என்பார்கள். எனவே, பல் சொத்தை என்பதை சாதாரண பிரச்னையாக மட்டுமே எல்லா நேரங்களிலும் புரிந்துகொள்ளக் கூடாது. மருத்துவரின் ஆலோசனை பெறுவது சிறந்ததாகும்.

சொத்தை பல் வந்தால் பல்லில் கருப்பு நிறம் ஏன் ஏற்படுகிறது?

பல்லின் எனாமல் பகுதிக்குள் Tubules இருக்கிறது. இதன் வழியாகவே பல்லுக்கு சத்து கிடைக்கிறது.  பல்லில் உற்பத்தியாகும் பாக்டீரியாக்கள் ட்யூபுள்ஸினை அடைத்துவிடும். எனவே, ட்யூபுள்ஸ்க்கு உணவு கிடைக்காமல் போவதால் அந்த இடம் அழுகிப் போகும். அதனால்தான் கருப்பு நிறமாக காட்சி தருகிறது.

சொத்தைப் பல் சிகிச்சைக்குப் பிறகும் மருத்துவரின் ஆலோசனை அவசியமா?

சொத்தைப்பல்லை அடைத்தாலும் 6 மாதத்திற்கு ஒரு முறை மருத்துவரிடம் போய் பரிசோதித்துக் கொள்வது நல்லது. அப்படியே விட்டுவிட்டால் 2 அல்லது 3 வருடம் கழித்து பாதிக்கப்பட்ட இடத்திலேயே, மீண்டும் சொத்தை பல் வர வாய்ப்பிருக்கிறது. ஏனெனில், அடைக்கப்பட்ட இடத்தில் சிறிய ஓட்டை ஏற்பட்டாலும் கூட அதில் போய் ஏதேனும் உணவுப்பொருட்கள் புகுந்திருந்தால் கூட மீ்ண்டும் சொத்தை பல் வந்துவிடலாம்.

எது நல்ல டூத் பேஸ்ட்?

டூத் பேஸ்ட்டில் சிவப்பு நிறம்(Alarming proposition) பூசப்பட்டிருந்தால் அதிக ரசாயனம் கலந்திருப்பதாக அர்த்தம். அதாவது பயன்பாட்டுக்கு உகந்தது அல்ல. அதுவே பச்சை நிறத்தில் பேஸ்ட்டின் மூடிக்கு கீழ் வர்ணம் பூசியிருந்தால் ரசாயனம் கலக்காதது, பயன்பாட்டுக்கு உகந்தது என்று அர்த்தம்.

ப்ரஷ்களை அடிக்கடி மாற்ற வேண்டுமா?

ப்ரஷ்சின் கூர்மையான பகுதியை பிரிஸ்டல்(Bristle) என கூறுவார்கள். இந்த கூர்மைத்தன்மை 3 மாதம் வரைதான் இருக்கும். 3 மாதங்களுக்குப் பிறகு, அதன் கூர்மைத்தன்மை குறைந்துவிடுவதால், ப்ரஷை மாற்றி விடுவதே சரியானது.

Flourid tooth paste எதற்காக?

பற்களில் Flourid tooth paste தடவுவது ஒரு மருத்துவ சிகிச்சை முறை. இதன் மூலம் பற்களில் சொத்தை, கூச்சம் போன்றவை ஏற்படாமல் தற்காலிகமாகத் தடுக்கலாம். விலை அதிகமான, இந்த Flourid tooth paste மருந்து கடைகளிலும் விற்கப்படுகிறது. இதனை பஞ்சில் நனைத்துத் தூங்க போகும் முன் பற்களில் தடவலாம். காலையில் எழுந்த பிறகு பல் துலக்கி வாய் கொப்பளித்துவிட வேண்டும்.

நவீன கால பல் சிகிச்சை முறைகள் பற்றி...

பற்களில் புள்ளி தெரிந்தால் Filling treatment முறையில் அடைத்துவிடலாம். சொத்தைப் பல் வரும் முன் பற்களை காப்பதற்கு Flourid tooth paste பயன்படுத்தலாம். வேர் சிகிச்சைமுறை என்பது சொத்தை பல்லை ஆழமாக சென்று அடைப்பதாகும். இதற்கு Root canal treatment என்று பெயர். முன்னர் எல்லாம் சொத்தை பல்லில் வழி வந்தால் சொத்தை பல் என்று தெரிய வந்தால் பல்லை பிடுங்கிவிடுவர். ஆனால், எல்லா சொத்தைப் பல்லையும் பிடுங்க வேண்டிய அவசியம் இல்லை. பல்லுக்கு ரத்த ஓட்டம் கொடுக்கும் நரம்பு பகுதியான Pulp பகுதியினை நீக்கிவிட்டு மருந்து வைத்து ஆழமாக அடைத்து விடலாம். அதை மறைக்க மேல் ஒரு மூடி(Cap) போட்டும் மூட வேண்டும். இந்த சிகிச்சை முறையால் சாப்பிடும்போது பற்களில் எதுவும் சிக்காது.

முன்னே இருக்கும் பல் மட்டும் சொத்தையாக இருந்தால் Ultra violet rays பயன்படுத்தலாம். Light cure resin filling முறையிலும் சொத்தைப்பல்லை அடைத்து விடலாம். வாய் திறக்கும்போதும், சிரிக்கும்போதும் இயற்கையான பற்கள் போன்றே தெரியும். கறையாக அதாவது மஞ்சளாக இருந்தால் பல்லை தேய்த்து எடுத்து, Ceramic facing மூலம் செயற்கை பல் தயாரித்து ஒட்டிவிடும் சிகிச்சையும் உண்டு.

பற்களின் நலம் காக்க எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுமுறை?

இனிப்பு உணவுகளை அதிகம் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், பாக்டீரியா உற்பத்தியாக இனிப்பு உணவு முக்கிய காரணமாக இருக்கிறது. இனிப்பைத் தவிர்க்க முடியவில்லை என்றால், சாப்பிட்ட பிறகு தண்ணீர் பயன்படுத்தி வாயைக் கொப்பளிப்பது கட்டாயம். இன்று எல்லாமே அதிக வெப்பநிலையில் சூடுபடுத்தி உண்ணும் பழக்கத்துக்கு வந்துவிட்டோம். இதுபோன்ற அதிக சூடான உணவுகளைத் தவிர்ப்பதும் அவசியம். மிதமான சூட்டில் உட்கொள்ளலாம். பதப்படுத்தப்பட்ட குளிர்பானங்கள் வாங்கி உட்கொள்வதையும் தவிர்க்க வேண்டும். சிலர் அதிகமாக காஃபி, டீ குடிக்கும் பழக்கம் கொண்டிருக்கிறார்கள். பற்களின் நலம் காக்க இதுவும் நிச்சயம் கட்டுப்படுத்த வேண்டிய ஒன்றே. குட்கா, புகைப்பழக்கம், மது போன்றவையும் பற்களின் நலனைக் கெடுப்பதில் பெரிய பங்கினை வகிக்கின்றன. இவற்றைத் தவிர்ப்பது எல்லா வகையிலும் நன்மை தரும்!

தொகுப்பு: அ.வின்சென்ட்

Related Stories:

>