சென்னையை சேர்ந்தவர் உட்பட ஈமுகோழி பண்ணை உரிமையாளர்களுக்கு 10 ஆண்டு சிறை; ரூ. 1.18 கோடி அபராதம்

கோவை: திருப்பூர் மாவட்டம் காங்கயம் சென்னிமலை ரோட்டில் ராஜா ஈமு கோழி நிறுவனம், தமிழ் ஈமுகோழி நிறுவனம் ஆகிய பெயரில் 2 ஈமுகோழி நிறுவனங்கள் செயல்பட்டு வந்தன. இந்த நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்தால் மாதந்தோறும் கூடுதல் வட்டி அளிக்கப்படும் என கூறியதையடுத்து ஏராளமானோர் முதலீடு செய்தனர். ஆனால் கூறியபடி வட்டி அளிக்கவில்லை. இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் கடந்த 2012ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், 2 நிறுவனங்களில் முதலீடு செய்த 72 பேரிடம் ரூ.1 கோடியே 20 லட்சத்து 39 ஆயிரம் மோசடி செய்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் ராஜா ஈமுகோழி நிறுவன உரிமையாளர் ராஜசேகர் (42), தமிழ் ஈமுகோழி நிறுவன உரிமையாளர் சென்னை வடபழனியை சேர்ந்த தமிழ்பிரபு (38) மற்றும் ரவிச்சந்திரன், ரித்திகா, குமார் ஆகிய 5 பேரை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு கோவையில் உள்ள தமிழக முதலீட்டாளர்கள் நல பாதுகாப்பு சங்க சிறப்பு கோர்ட்டில் (டான்பிட்) நடந்து வந்தது. வழக்கு விசாரணை முடிந்ததை அடுத்து நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

தீர்ப்பில் ராஜசேகர், தமிழ்பிரபு ஆகியோருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1 கோடியே 18 லட்சத்து 80 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும், அபராத தொகையை முதலீடு செய்த 72 பேருக்கும் பிரித்து கொடுக்க வேண்டும் என நீதிபதி ரவி உத்தரவிட்டார். வழக்கில் இருந்து ரவிச்சந்திரன், ரித்திகா, குமார் ஆகியோர் விடுவிக்கப்பட்டனர்.

Related Stories: