காதல் தோல்வியால் கல்லூரி மாணவர் தற்கொலை; இறுதிச்சடங்கில் தந்தையும் சாவு

மதுரை: காதல் தோல்வியால் கல்லூரி மாணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இறுதிச்சடங்கு செய்தபோது தந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. மதுரை கீரைத்துறை ஆதிமூலம் பிள்ளை பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி கப்புலட்சுமி. மகன் சிவானந்த மணி (21). மதுரையில் உள்ள தனியார் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வந்தார். கடந்த சில வருடங்களாக சிவானந்த மணி அதே பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

அந்தப்பெண் இவரது காதலை ஏற்கவில்லை. இதனால் விரக்தியிலிருந்த சிவானந்த மணி கடந்த 24ம் தேதியன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்தார். மயங்கி விழுந்த அவரை மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சையளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதுகுறித்து கீரைத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.கீரைத்துறை மயானத்தில் இறுதிச்சடங்குகள் நடத்தன. அப்போது கணேசன், ‘‘என் ஒரே மகனே... நீயும் போயிட்டியே’’ என்று கதறி அழுதார். தொடர்ந்து வீட்டிற்கு வந்தவர் புலம்பியபடியே இருந்தார். அப்போது திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. வலியால் துடித்த கணேசன் பரிதாபமாக உயிரிழந்தார்.

Related Stories: