கோவில் விழாவில் நகை பறித்த மூன்றாவது கணவருடன் சென்னை பெண் கைது

நாகர்கோவில்: குமரி மாவட்டம் புதுக்கடை பகுதியில் உள்ள ஒரு கோவிலில் நேற்று கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இந்த விழாவில் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திரண்டிருந்தனர். விழா நடந்து கொண்டிருந்த போது, கூட்டத்தில் நின்ற ஒரு பெண்ணின் கழுத்தில் கிடந்த செயினை யாரோ திருடி உள்ளனர். உடனே அந்த பெண் கூட்டத்தில் சத்தம் போட்டார். இதையடுத்து பொது மக்கள் மற்றும் கோவில் நிர்வாகிகள் செயின் திருட்டில் ஈடுபட்ட 3 பேரை சுற்றி வளைத்து பிடித்தனர். உடனே அவர்களை புதுக்கடை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அதைத் தொடர்ந்து 3 பேரிடமும் போலீசார் கிடுக்கிப்பிடியாக விசாரணை நடத்தினர்.

விசாரணையில் பிடிபட்டவர்கள் சென்னை கொளத்தூர் பகுதியை சேர்ந்த குமாரவேல் (48), அவரது மனைவி குமாரி (40), கும்மிடிபூண்டி பகுதியை சேர்ந்த மணிகண்டன் (37) என்பது தெரிய வந்தது. அவர்களுடன் வேறு சிலரும் உள்ளதாக தெரிய வந்து உள்ளது. இந்த கும்பல் தமிழகத்தின் பல பகுதிகளில் நடக்கும் பிரமாண்ட விழாக்கள், பொதுக் கூட்டங்களில் இது போன்று கை வரிசை காட்டுவது தெரிய வந்து உள்ளது. மேலும் பிடிபட்ட நபர்கள் மீது தமிழகம் முழுவதும் உள்ள பல காவல் நிலையங்களில் நகை திருட்டு தொடர்பாக வழக்கு பதிவாகி உள்ளதும் தெரிய வந்தது.

இதையடுத்து புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து குமாரியை தக்கலை மகளிர் சிறையிலும், குமாரவேல், மணிகண்டன் ஆகியோரை நாகர்கோவில் சிறையிலும் அடைத்தனர். கைதான குமாரிக்கு, குமாரவேல் 3வது கணவர் என்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதற்கிடையில் சம்மந்தப்பட்ட கோவில் விழாவில் கலந்து கொண்ட தெரசம்மாள் (55) கழுத்தில் கிடந்த 2 பவுன் தங்க செயின் விழா கூட்டத்தில் மாயமானதாக புதுக்கடை போலீசில் புகார் செய்துள்ளார். இந்த 3 பேரும் பொதுமக்கள் கையில் சிக்கிய உடன், கிடைத்த நகையுடன் மற்றவர்கள் மாயமானதாக தெரிகிறது.

Related Stories: