ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினுடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் பேச்சு

டெல்லி: இருதரப்பு வர்த்தகம், உக்ரைன் விவகாரம் குறித்து ரஷ்ய அதிபர் புதினுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசினார். கடந்த பிப்ரவரி மாதம் ரஷ்யா- உக்ரைன் போர் உச்சத்தில் இருந்தபோது, பிரதமர் மோடி ரஷ்ய அதிபர் புதினுடன் தொலைபேசியில் பேசினார். அதன்பிறகு, தற்போது மீண்டும் ரஷ்ய அதிபருடன் பிரதமர் தொலைபேசியில் உரையாடினார். குறிப்பாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ரஷ்ய அதிபர் புதின் இந்தியா வந்தபோது, இந்தியாவிற்கும்-ரஷ்யாவிற்கும் இடையில் பல்வேறு விதமான ஒப்பந்தங்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டு, பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டது. இவற்றை எவ்வாறு செயல்படுத்துவது என்பது குறித்து இருவரும் ஆலோசனை மேற்கொண்டனர்.

மேலும், வேளாண் பொருட்கள், உரம் மற்றும் மருந்து பொருட்களின் வர்த்தகம் போன்றவற்றில் இருதரப்பு வர்த்தக உறவை மேலும் எப்படி ஊக்கப்படுத்துவது என்பது குறித்து இருவரும் ஆலோசித்ததாக தெரிவிக்கப்பட்டது. மட்டுமல்லாமல், பல்வேறு உலகளாவிய விவகாரங்கள் குறித்தும், சர்வதேச எரிசக்தி, உணவு சந்தை(அதாவது, ரஷ்ய- உக்ரைன் போர் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அதிகரிப்பு), உணவு பொருள் பற்றாக்குறை உள்ளிட்டவற்றை குறித்து இருவரும் விரிவாக விவாதித்துள்ளனர். குறிப்பாக, உக்ரைன் விவகாரம் குறித்து பேசிய பிரதமர் மோடி, தங்களின் நீண்ட கால நிலைபாடான அமைதி பேச்சுவார்த்தை மற்றும் ராஜாங்க ரீதியிலான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்கிற தங்களது நிலைப்பாட்டை, புதினிடம் பிரதமர் மோடி மீண்டும் வலியுறுத்தி கூறியுள்ளார்.

இதைத்தவிர, பல்வேறு உலகளாவிய விவகாரங்கள் குறித்தும், இரு தரப்பு விவகாரங்கள் குறித்தும், அவ்வப்போது, இருதரப்பும் தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு இருநாட்டு தலைவர்களும் சம்மதம் தெரிவித்துள்ளனர். ஆகவே, இருதரப்பு வர்த்தக உறவை மேலும் வலுப்படுத்துவது, உக்ரைன் விவகாரம், பேச்சு வாரத்தை மற்றும் ராஜாங்க ரீதியிலான நடவடிக்கை நேர்கொள்ளும் அம்சங்கள் குறித்து இருவரும் தொலைபேசியில் விவாதித்துள்ளனர்.               

Related Stories: