கலெக்டர் ஆபீசில் போலியாக நேர்காணல் நடத்தி வேலை வாங்கித் தருவதாக; ரூ. 1.26 கோடி மோசடி செய்த 2 பேர் கைது

மதுரை: மதுரை மாவட்டம் செக்கானூரணி கே.புளியங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் சேகர். செக்கானூரணியை சேர்ந்த முனீஸ்வரன், ‘மதுரை கலெக்டரின் உதவியாளரான பாண்டியராஜன், எனது நண்பர் ரஞ்சித்குமாருக்கு நன்கு பழக்கமானவர். கலெக்டர் அலுவலகத்தில் காலி பணியிடங்கள் உள்ளன. உங்கள் மகன் மற்றும் மகளுக்கு வேலை வாங்கி தருகிறேன்’ என்று சேகரிடம் கூறியுள்ளார்.

இதனை நம்பிய சேகர், தனது மகன் மற்றும் மகளின் வேலைக்காக ரூ. 8 லட்சம் கொடுத்துள்ளார். கடந்த 2019ம் ஆண்டு நவம்பரில் வருவாய் துணை மற்றும் மதுரை மாநகராட்சி துணை அலுவலர் பணிகளுக்கு வேலை மற்றும் பயிற்சிக்கு வருமாறு, போலி பணி ஆணையை, கலெக்டர் அலுவலகத்தில் இருந்து அனுப்பப்பட்டது போல சேகரின் மகன் மற்றும் மகளுக்கு முனீஸ்வரன் அனுப்பியுள்ளார். 100க்கும் மேற்பட்ட பணிகளுக்கு மதுரை கலெக்டர் அலுவலகம் மற்றும் மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் ஆட்களை எடுக்கின்றனர் என்று முனீஸ்வரன், சேகரிடம் கூறியுள்ளார்.

இதையடுத்து சேகரின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என 26 நபர்களிடம் அலுவலக உதவியாளர், அலுவலக ஆய்வாளர் மற்றும் துப்புரவு பணியாளர்கள் பணிகளுக்கு என மொத்தம் ரூ.1 கோடியே 26 லட்சத்து 60 ஆயிரம் பணத்தை முனீஸ்வரன் வாங்கியுள்ளார். மேலும் சேகரின் மகன், மகள் உட்பட 28 நபர்களுக்கும் மதுரை கலெக்டர் கையெழுத்துடன் பணி ஆணை நகலை, பதிவு தபால் மூலம் அலுவலகத்தில் இருந்து வருவது போல் ஏற்பாடு செய்து அனுப்பி வைத்துள்ளார். மேலும் 2021 நவம்பர் 23ம் தேதியன்று அலுவலக நேரத்திற்கு முன்பாகவே காலை 8 மணி முதல் 8.30 மணிக்குள் கலெக்டர் அலுவலகத்திற்கு நேர்காணலுக்காக வருமாறு கூறி, அனைவரையும் வரவழைத்துள்ளனர்.

கலெக்டர் அலுவலகத்தில் உள்ள வாடிப்பட்டி ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகத்திற்கு ஒவ்வொருவராக அழைத்து, ஆட்சியரின் உதவியாளர் என கூறி அறிமுகமான பாண்டியராஜன், அவரது உதவியாளர் ரஞ்சித் மற்றும் மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் அவர்களிடம் நேர்காணல் நடத்தினர். அனைவரது ஆவணங்களையும் சரி பார்த்துள்ளனர். இன்னும் 5 நாட்களில் பணியில் சேரலாம் என்று கூறி, அவர்களை அனுப்பி வைத்துள்ளனர். 5 நாட்களுக்கு பிறகு பணியில் சேரச் சென்ற அவர்களுக்கு, அது போலி ஆணை என தெரியவந்தது.

ஏமாற்றப்பட்டதை அறிந்த அவர்கள், பணத்தை தருமாறு கேட்டுள்ளனர். பணத்தை தர முடியாது என முனீஸ்வரன் தரப்பினர் அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்து சேகர் மதுரை மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மோசடியில் ஈடுபட்ட முனீஸ்வரன், பாண்டியராஜன் ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர். தப்பிய ரஞ்சித் மற்றும் மாற்றுத்திறனாளி பெண்ணை தேடி வருகின்றனர்.

Related Stories: