அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு தடை விதிக்க கோரிய சிவசேனா கூட்டணியின் கோரிக்கை நிராகரிப்பு; சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு

புதுடெல்லி: ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான 39 எம்எல்ஏக்கள், மகாராஷ்டிரா சட்டப் ேபரவை கூட்டத் தொடரில் பங்கேற்க தடை விதிக்கக் கோரியும், அவசர வழக்காக விசாரிக்க கோரியும் சிவசேனா - காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் புதியதாக மனு தாக்கல் செய்யப்பட்டது. மகாராஷ்டிராவில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியை முறித்து, பாஜகவுடன் கூட்டு சேர்ந்து ஆட்சி அமைக்கக் கோரி சிவசேனா கட்சியின் அதிருப்தி எம்எல்ஏக்கள் அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் போர்க்கொடி தூக்கினர். அவர்கள் சுயேச்சை எம்எல்ஏக்கள் சிலர் ஆதரவுடன் கவுகாத்தி ஓட்டலில் தங்கியிருந்தனர்.

இதையடுத்து, சிவசேனா கட்சியைச் சேர்ந்த அதிருப்தி எம்எல்ஏக்கள் 16 பேரை தகுதி நீக்கம் செய்யும்படி மகாராஷ்டிரா துணை சபாநாயகர் நர்ஹரி ஜிர்வலிடம், சிவசேனா கட்சி சார்பில் மனு அளிக்கப்பட்டது.

அதன்படி, ஏக்நாத் ஷிண்டே உட்பட 16 எம்எல்ஏக்களுக்கு துணை சபாநாயகர் தகுதிநீக்க நோட்டீஸ் அனுப்பினார். இதனை எதிர்த்து ஏக்நாத் ஷிண்டே தரப்பினர் உச்ச நீதிமன்றத்தை நாடினர். இம்மனுவை விசாரித்த நீதிமன்றம், ‘அனைத்து தரப்பினரும் ஐந்து நாட்களுக்குள் எதிர் பிரமாணப் பத்திரங்களை தாக்கல் செய்ய வேண்டும். எதிர் வாக்குமூலங்களுக்கு பதிலளிக்க ஏக்நாத் ஷிண்டே முகாமுக்கு மூன்று நாட்கள் அவகாசம் உள்ளது. அடுத்த விசாரணை ஜூலை 11ம் தேதி நடைபெறும். துணை சபாநாயகர் நர்ஹரி ஜிர்வாலுக்கு எதிராக ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா எம்எல்ஏக்கள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பாக விரிவான பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும்’ என்று உத்தரவிட்டது. இதற்கிடையே ஏக்நாத் ஷிண்டே முதல்வராகவும், பாஜகவின் முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் துணை முதல்வராகவும் நேற்று பதவியேற்றுக் கொண்டனர்.

நாளை மாநில சட்டப் ேபரவையின் இரண்டு நாள் சிறப்பு கூட்டத் தொடர் தொடங்குகிறது. இந்நிலையில் முந்தைய சிவசேனா - காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி சார்பில் இன்று உச்சநீதிமன்றத்தில் அவசர வழக்காக விசாரிக்க கோரி மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘ஏக்நாத் ஷிண்டே உட்பட 16 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கு உச்சநீதிமன்ற விசாரணையில் உள்ளது. அதனால் வரும் 11ம் தேதி வரை ஏக்நாத் ஷிண்டே உட்பட 39 அதிருப்தி எம்எல்ஏக்கள் சட்டப் பேரவை கூட்டத் தொடரில் பங்கேற்பதற்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘புதியதாக தாக்கல் செய்துள்ள மனுவை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க முடியாது.

தடை உத்தரவு எதையும் பிறப்பிக்க முடியாது. அனைத்து நடவடிக்கைகளையும் பார்த்துக் கொண்டுதான் உள்ளோம். வரும் 11ம் தேதி 16 தகுதி நீக்க எம்எல்ஏக்கள் தொடர்பான வழக்கு விசாரணையின் போது, தற்போது தாக்கல் செய்துள்ள மனு குறித்தும் விசாரித்து உத்தரவு பிறப்பிக்கப்படும்’ என்று தெரிவித்தனர். அதனால்  சிவசேனா - காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் சார்பில் இன்று விடுத்த அவசர வழக்கு கோரிக்கை மனுவை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

Related Stories: