சாலைகள், தெரு விளக்கு எரிவாயு தகனமேடை சீரமைக்கப்படும்; திருவள்ளூர் நகரமன்ற தலைவர் உறுதி

திருவள்ளூர்: திருவள்ளூர் நகரமன்ற கூட்டம் தலைவர் உதயமலர் பாண்டியன் தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் சி.சு.ரவிச்சந்திரன், ஆணையர் ராஜலட்சுமி, சுகாதார அலுவலர் ஆர்.கே.கோவிந்தராஜ் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நகராட்சி கவுன்சிலர்கள் வசந்தி, சுமித்ரா, நீலாவதி, அம்பிகா, பிரபு, சாந்தி, டி.கே.பாபு, பத்மாவதி, அருணா, செல்வகுமார், இந்திரா, சீனிவாசன், ஹேமலதா, கந்தசாமி, விஜயகுமார், கமலி, சித்ரா,ஆனந்தி, செந்தில்குமார், விஜயலட்சுமி, தனலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், சாலையில் தாழ்வாக உள்ள மின்வயர்களை சரி செய்தல், நகராட்சியில் பழுதடைந்த நவீன எரிவாயு தகன மேடையை சீரமைப்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசியதாவது: வி.இ.ஜான்: அமாவாசை தினத்தன்று திருவள்ளூர் வீரராகவர் கோயில் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை சரி செய்ய வேண்டும். சாலையில் சுற்றி திரியும் தெரு நாய்களுக்கான குடும்ப கட்டுப்பாடு தொடர வேண்டும், வட்டாட்சியர் அலுவலகம் எதிரே குடிநீர் குழாய் சேதமடைந்துள்ளதால் கழிவுநீரும் கலந்து சுகாதார சீர்கேடு ஏற்படுவதால் சீர் செய்ய வேண்டும். ஒப்பந்த அடிப்படையிலான தூய்மை பணியாளர்களுக்கு முறையாக ஊதியம் வழங்காமல் அலைக்கழிப்பதையும் நிறுத்த வேண்டும். அய்யூப் அலி: தூய்மை பணிக்கான ஆட்கள் பற்றாக்குறையால் தேங்கும் குப்பை மற்றும் கழிவுநீரை அகற்ற கூடுதல் பணியாளர்களை நியமிக்க வேண்டும். பிரபாகரன்: பட்டரைபெரும்புதூரில் இருந்து வீரராகவர் கோயிலுக்கு பைப் மூலம் தண்ணீர் கொண்டு வருவதற்காக தோண்டிய சாலையை சீரமைக்க வேண்டும்.

தாமஸ் (எ) ராஜ்குமார்: சாலைகளை மேம்படுத்த வேண்டும். பல தெருக்கள் இருளில் மூழ்கியுள்ளதால் தெரு விளக்குகளை சரி செய்ய வேண்டும். இதையடுத்து தலைவர் உதயமலர் பாண்டியன் பேசுகையில், ‘உங்களது கோரிக்கை அனைத்தையும் நிறைவேற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

Related Stories: