காவல்துறையில் பணியாற்றி உயிரிழந்த மோப்ப நாய்க்கு அஞ்சலி

ஊட்டி: நீலகிரி காவல்துறையில் 10 ஆண்டுகள் பணியாற்றிய மோப்பநாய் உயிரிழந்தது. காவல்துறையில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளை கண்டறிய மோப்ப நாய்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. காவல்துறையில் பணியாற்றும் அதிகாரிகளுக்கு வழங்கப்படும் பதவி உயர்வு போல, இந்த நாய்களுக்கும் பதவி உயர்வு உட்பட அனைத்து சலுகைகளும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், நீலகிரி மாவட்ட காவல்துறையில் 4 ேமாப்ப நாய்கள் புலன் விசாரணைக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில், இரண்டு நாய்கள் குற்ற இடத்தினை சோதனை செய்யவும், இரண்டு மோப்ப நாய்கள் வெடிமருந்து சோதனை செய்யவும் பயன்படுத்தப்படுகிறது.

இந்நிலையில், கடந்த 2011ம் ஆண்டு பிறந்த ஜாக்கி என்ற மோப்ப நாய் 25.04.2012ம் ஆண்டு காவல்துறை பணியில் சேர்ந்தது. படிப்படியாக பதவி உயர்வு பெற்று துணை கண்காணிப்பாளர் (டிஎஸ்பி) அந்தஸ்திற்கு பதவி உயர்வு பெற்றது. ஜாக்கி கடந்த 96 முக்கிய பிரமுகர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு சிறப்பாக பணியாற்றியுள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 10ம் தேதி பணியில் இருந்து ஓய்வுபெற்றது. கடந்த நான்கு மாதங்களாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தது.

இந்நிலையில், ஜாக்கி நேற்று உயிரிழந்தது. 10 ஆண்டுகள் காவல்துறையில் பணியாற்றி உயிரிழந்த மோப்ப நாய் காவல்துறை மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் நீலகிரி மாவட்ட எஸ்பி ஆசிஷ்ராவத், கூடுதல் எஸ்பி., மோகன் நவாஸ், டிஎஸ்பிக்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் பலர் கலந்துக் கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

Related Stories: