பள்ளிகள் திறப்பு, கொரோனா பரவலால் ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது

ஊட்டி: கடந்த மூன்று மாதமாக ஊட்டிக்கு அதிகளவு சுற்றுலா பயணிகள் வந்த நிலையில், தற்போது வார நாட்களில் சுற்றுலா பயணிகள் வருகை வெகுவாக குறைந்துள்ளது. நீலகிரி மாவட்டத்திற்கு தினமும் வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து அதிகளவு சுற்றுலா பயணிகள் வருகின்றனர். குறிப்பாக, கோடை காலமான ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் அதிகளவு சுற்றுலா பயணிகள் வருவார்கள். சில சமயங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் தாமதமாக திறந்தால், ஜூன் மாதங்களிலும் அதிகளவு சுறு்றுலா பயணிகள் வருவது வழக்கம். கடந்த இரு ஆண்டுகளாக கொரோனா பாதிப்பு காரணமாக சுற்றுலா பயணிகள் வர தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால், ஊட்டியில் சுற்றுலா பயணிகளை நம்பி தொழில் செய்து வரும் வியாபாரிகள், காட்டேஜ், லாட்ஜ் உரிமையாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில், இரு ஆண்டுகளுக்கு பின் இம்முறை சுற்றுலா பயணிகள் வருவதற்கு அனுமதிக்கப்பட்டது.

கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்தது. தினமும் பல ஆயிரம் சுற்றுலா பயணிகள் வந்து சென்றனர். குறிப்பாக, மே மாதம் தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து சென்றனர். மலர் கண்காட்சியை காண மட்டும் ஒன்றரை லட்சம் சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். பொதுவாக, ஜூன் மாதம் பள்ளிகள் திறந்தால் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்து காணப்படும். ஆனால், இம்முறை பள்ளிகள் தாமதமாக திறந்த நிலையில், கடந்த மாதம் 15ம் தேதி வரை ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. அதன்பின், படிப்படியாக குறைந்து வந்தது. தற்போது வார நாட்களில் ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை மிகவும் குறைந்துள்ளது. பள்ளிகள் திறக்கப்பட்டதாலும், கொரோனா பாதிப்பு நாடு முழுவதும் சற்று அதிகரித்து வரும் நிலையில், சுற்றுலா பயணிகள் வருகை குறைந்துள்ளது. தற்போது வார நாட்களில் நாள் ஒன்றுக்கு 3 ஆயிரம் வரையிலான சுற்றுலா பயணிகளே வருகின்றனர்.

இவர்களில் பெரும்பாலானவர்கள் இங்கு தங்குவதை தவிர்க்கின்றனர். காலையில் வந்து சுற்றி பார்த்துவிட்டு மாலையில் சொந்த ஊர்களுக்கு திரும்புகின்றனர். இதனால், கடந்த இரு மாதங்களாக ஊட்டியில் உள்ள காட்டேஜ், லாட்ஜ் மற்றும் வியாபாரிகளுக்கு ஆன வியாபாரத்தில் அடி விழுந்துள்ளது. இதனால், வியாபாரிகள் கவலையடைந்துள்ளனர்.இனி இரண்டாம் சீசனான செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களிலேயே சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: