கடந்த 7 ஆண்டுகளில் 12.28 கோடி பேர் சென்னை மெட்ரோ இரயில்களில் பயணித்துள்ளனர்: மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு

சென்னை: கடந்த ஏழு ஆண்டுகளில் 12.28 கோடி பயணிகளும், 2022 ஜூன் மாதத்தில் 52.90 லட்சம் பயணிகளும் சென்னை மெட்ரோ இரயில்களில் பயணித்துள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்:

சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் தனது மெட்ரோ இரயில் சேவையை கடந்த 2015 ஆம் ஆண்டு ஜூன் 29 முதல் சென்னையில் துவங்கியது. இதுவரை சென்னையில் உள்ள மக்களுக்கும், அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் பணியாற்றுபவர்களுக்கும் சென்னை மெட்ரோ இரயில் ஒரு நம்பகமான பாதுகாப்பான போக்குவரத்து வசதியை செய்து வருகிறது. மெட்ரோ இரயில் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது.

இதுவரை சென்னை மெட்ரோ இரயிலில் கடந்த ஏழு ஆண்டுகளில் அதாவது, 2015-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் 2022-ம் ஆண்டு ஜூன் மாதம் வரை 12 கோடியே 28 லட்சத்து 24 ஆயிரத்து 577 பயணிகள் பயணித்துள்ளார்கள்.

01.01.2022 முதல் 30.04.2022 வரை மொத்தம் 1,47,19,991 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர்.

01.05.2022 முதல் 31.05.2022 வரை மொத்தம் 47,87,846 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர்.

01.06.2022 முதல் 30.06.2022 வரை மொத்தம் 52,90,390 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர்.

அதிகபட்சமாக 03.06.2022 அன்று 2,02,456 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர். மேலும், மே மாதத்தை காட்டிலும் ஜூன் மாதத்தில் 5,02,544  பயணிகள் அதிகமாக பயணித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 2022, ஜூன் மாதத்தில் மட்டும் க்யுஆர் குறியீடு (QR Code) பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 13,18,641 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர். மேலும், பயண அட்டை பயணச்சீட்டு (Travel Card Ticketing System) முறையைப் பயன்படுத்தி 31,65,340 பயணிகள் பயணம் செய்துள்ளனர்.

சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் மெட்ரோ இரயில்களில் பயணிப்பவர்களுக்கு க்யுஆர் குறியீடு (QR Code) பயணச்சீட்டில் 11.09.2020 முதல் 20% கட்டணத் தள்ளுபடி வழக்கம் போல் வழங்கி வருகிறது. மெட்ரோ இரயில் பயண அட்டைகளை (Travel Card) பயன்படுத்தி பயணிக்கும் பயணிகளுக்கு 22.02.2021 முதல் 20%  கட்டணத் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

சென்னை மெட்ரோ இரயில் பயண அட்டையை விற்பனை செய்வதற்கு அங்கீகரிக்கப்பட்ட முகவர்களாக விருப்பம் உள்ளவர்கள் அருகிலுள்ள மெட்ரோ இரயில் நிலைய கட்டுப்பாட்டு அலுவலரை அணுகலாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories: