பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்ற 3 பேர் கைது; 600 மாத்திரைகள் பறிமுதல்

பல்லாவரம்: பல்லாவரம் உள்பட சுற்றுவட்டாரப் பகுதிகளில் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்டு வந்த 3 பேரை நேற்று மாலை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 600 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. சென்னை புறநகர் பகுதிகளான பல்லாவரம், தாம்பரம் உள்பட சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஒரு கும்பல் போதை மாத்திரை விற்பனை செய்து வருவதாக நேற்று பல்லாவரம் போதைபொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதைத் தொடர்ந்து, நேற்று மாலை பல்லாவரம் பகுதிகளில் தனிப்படை போலீசார் தீவிரமாக கண்காணித்தனர். அப்போது ஒரு பள்ளி அருகே சந்தேக நிலையில் நின்றிருந்த 3 பேரை சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் அவர்களை காவல் நிலையம் கொண்டு வந்து விசாரித்தனர். விசாரணையில், அவர்கள் மீனம்பாக்கம், அம்பேத்கர் நகர் 2வது தெருவை சேர்ந்த பவுல் (எ) பாபி (21), பல்லாவரம் கண்டோன்மெண்ட், பாரத் நகரை சேர்ந்த ஜாகீருல்லா (25), சேலையூர், ரங்கநாதன் தெருவை சேர்ந்த உதயசீலன் (46) எனத் தெரியவந்தது.

மேலும், மருத்துவமனை மற்றும் மருந்து கடைகளில் வலிநிவாரணி மாத்திரை கடத்தி வந்து, பல்லாவரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பதுக்கி வைத்து பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் போதை மாத்திரைகளாகவும் ஊசி மருந்தாகவும் விற்பனை செய்து வந்ததாகவும் தெரியவந்தது. இதுகுறித்து பல்லாவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 600 போதை மாத்திரைகள், 100க்கும் மேற்பட்ட போதை ஊசி மருந்து, சிரெஞ்சுகள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: