எம்ஜிஆர் நோக்கத்திற்கு எதிராக ஓபிஎஸ் செயல்பாடு உள்ளது: உச்சநீதிமன்றத்தில் ஈபிஎஸ் தாக்கல் செய்த மனுவில் தகவல்

டெல்லி: எம்ஜிஆர் நோக்கத்திற்கு எதிராக ஓ.பன்னீர்செல்வத்தின் செயல்பாடுகள் உள்ளது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருக்கிறார். அதிமுகவில் உட்கட்சி மோதல் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது. ஈபிஎஸ் அணியைப் பொறுத்தவரை ஜூலை 11-ல் பொதுக்குழு நடத்துவது; அதில் எடப்பாடி பழனிசாமிக்கு பொதுச்செயலாளராக மகுடம் சூட்டுவது என்பதில் உறுதியாக இருக்கிறது. இதற்காக அத்தனை வியூகங்களையும் வகுத்து செயல்பட்டு வருகிறது எடப்பாடி பழனிசாமி கோஷ்டி. ஆனால் ஜூலை 11ம் தேதி நடைபெறும் அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரிக்க மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டம் பற்றிய நீதிமன்ற அவமதிப்பு வழக்கை மட்டும் திங்கள்கிழமை விசாரிப்பதாக நீதிபதி துரைசாமி தலைமையிலான அமர்வு அறிவித்துள்ளது. இதனிடையே  அதிமுக பொதுக்குழு தொடர்பான உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் ஈ.பி.எஸ் அணியில் மேல் முறையீடு செய்துள்ளனர். இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த 378 பக்கங்களை கொண்ட மனுவில் எடப்பாடி பழனிசாமி சரமாரி குற்றம்சாட்டி உள்ளார். அதில், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது தரப்பினரின் செயல்பாடு எம்.ஜி.ஆரின் நோக்கத்திற்கு எதிராக உள்ளதாக தெரிவித்துள்ளார். கட்சியின் அடிப்படை நோக்கத்திற்கு எதிராகவும், அதிமுக உருவாக்கப்பட்டதற்கு எதிராகவும் ஓ.பன்னீர்செல்வம் செயல்படுகிறார்.

அதிமுக விவகாரங்களில் முடிவெடுக்கும் உரிமை பொதுக்குழுவின் அதிகாரத்துக்குட்பட்டது. அதிமுகவின் ஜனநாயக அமைப்பு முறையில் தலையிடுவது போல் உயர்நீதிமன்ற நீதிபதிகளின் உத்தரவு உள்ளது. எதிர்மனுதாரருக்கு வீட்டோ அதிகாரம் தருவது போல் கட்சி தலைமை பற்றி விவாதிக்கக்கூடாது என்ற ஆணை உள்ளது. ஐகோர்ட் நீதிபதிகளின் உத்தரவை செயல்படுத்தினால் கட்சியின் ஜனநாயகத்தை சீர்குலைக்கும். கட்சியின் செயற்குழு, பொதுக்குழு முடிவுகள் கட்சி நிர்வாகிகள் தொடர்புடையது. அதில் நீதிமன்றம் தலையிட அதிகாரம் கிடையாது. எனவே பொதுக்குழுவின் முடிவுகளை நீதிமன்றம் கட்டுப்படுத்தக் கூடாது என உயர்நீதிமன்றத்திற்கு உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Related Stories: